பிக்மீ (PickMe) மற்றும் உபர் (Uber) போன்ற போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கும், பாரம்பரியத் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களுக்கு நாட்டின் பொதுச் சட்டங்கள் பொருந்தும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 டிசம்பரில், எல்ல (Ella) பகுதியில் பிக்மீ ஓட்டுநருக்கும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறுகளைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும் மோதல்களும் வெடித்தன. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, முச்சக்கர வண்டிஓட்டுநர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிக்மீ, உபர் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்திருந்தார்.
பொது ஒழுங்கைப் பேணுவதே இலங்கை பொலிஸாரின் முதன்மையான கடமை என்று குறிப்பிட்ட அவர், நிறுவனங்களுக்கு இடையிலான அல்லது தொழிற்சங்கங்களுக்கு இடையிலான மோதல்கள் எதுவாக இருந்தாலும், வன்முறை, அச்சுறுத்தல் அல்லது மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.