2026 ஜனவரி 27 |
-
நுரைச்சோலையில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கான பொறுப்புக்கூறல் குறித்தும் மின் நுகர்வோர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
தொடர்புடைய கொள்முதல் அதிகாரிகள் அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, அரசாங்கத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 75 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக மின் நுகர்வோர் சங்கம் (ECA) குற்றம் சாட்டியுள்ளது.
பொது விவாதத்தை ஏற்படுத்திய நிலக்கரி கப்பல் தொடர்பாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள், தேவையான கலோரிக் பெறுமானத்தை (Calorific value) கொண்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை அமைச்சரவை பேச்சாளர் ஜனவரி 25 அன்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து ‘ கருத்து தெரிவித்த மின் நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக, நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பற்றாக்குறையை ஈடுகட்ட டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் இந்த நிதி இழப்பு ஏற்படுவதாக அவர் கூறினார்.
“இந்த டெண்டருடன் தொடர்புடைய மூன்று நிலக்கரி கப்பல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். ஜனவரி 2 முதல் 9 வரை பயன்படுத்தப்பட்ட முதலாவது கப்பலில் இருந்த நிலக்கரியால், ஒரு மின் பிறப்பாக்கி 15 மெகாவாட் (MW) உற்பத்தித் திறனை இழந்தது. இதன் மூலம் மூன்று பிறப்பாக்கிகளிலும் சேர்த்து மொத்தம் 45 மெகாவாட் இழப்பு ஏற்பட்டது. இரண்டாவது கப்பல் குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. மூன்றாவது கப்பலில் இருந்து பெறப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்திய போது, கிடைக்க வேண்டிய மின் உற்பத்தியை விட சுமார் 100 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டது,” என அவர் குற்றம் சாட்டினார்.
இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டியிருந்ததால், ஒரு நாளைக்கு 75 மில்லியன் ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தச் சுமையை இறுதியில் மின் நுகர்வோரே சுமக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் இழப்பீடு பெற்றுத் தரப்படும் எனக் கூறியுள்ள போதிலும், தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று தம்மிக கேள்வி எழுப்பினார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“கொதிகலன்களில் இருந்து வெளியேறும் சாம்பல், குறிப்பாக மழைக்காலங்களில் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தாவரங்களுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கும். நிலக்கரியில் அனுமதிக்கப்பட்ட சாம்பல் உள்ளடக்கம் 11 சதவீதமாகும், இது 16 சதவீதத்தைத் தாண்டினால் அந்த நிலக்கரி நிராகரிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் அதை நிராகரிக்கவில்லை,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உள் அறிக்கைகள் மற்றும் இந்தியாவில் இருந்து பெறப்பட்ட தர அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். “எரிசக்தி அமைச்சரை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) உடனடியாக விசாரணையைத் தொடங்கி, ஏற்பட்ட மொத்த நிதி இழப்பைக் கணக்கிட்டு பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
இது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜயநாத் ஹேரத்திடம் கேட்டபோது, இது ஒரு கொள்முதல் தொடர்பான விவகாரம் என்பதால் அது நேரடியாகத் தனது அதிகார வரம்பிற்குள் வராது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.