(Sri Lanka Tourism)
ஐரோப்பாவின் மிகப்பெரிய நுகர்வோர் பயணக் கண்காட்சிகளில் ஒன்றான, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நடைபெற்ற CMT 2026 இல் இலங்கை சுற்றுலாத்துறை தனது பிரசன்னத்தைப் பதிவு செய்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த இலங்கை அரங்கில், உள்ளூர் சுற்றுலாத் துறையின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இது ஜெர்மன் பயணிகளுடன், குறிப்பாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிடும் பயணிகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கான ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
CMT 2026 இல் இலங்கையின் பங்கேற்பானது, நுகர்வோருடன் நேரடி ஈடுபாட்டை ஏற்படுத்த உதவியதோடு, நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் ஆண்டு முழுவதும் அனுபவிக்கக்கூடிய சுற்றுலாப் பயணங்கள் குறித்த ஆர்வத்தைத் தூண்டவும் வழிவகுத்தது. முக்கிய நுகர்வோர் சார்ந்த பயணத் தளங்களில் இலங்கை சுற்றுலாத்துறை பங்கேற்க வேண்டிய நீண்ட காலத் தேவையை இந்தப் பங்கேற்பு பூர்த்தி செய்துள்ளதுடன், சுற்றுலாத் தலங்கள் குறித்த விளம்பரங்களை நேரடியாகப் பயணிகளின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறையின் கீழ், இலங்கையின் சுற்றுலா நிறுவனங்கள் (DMCs) மூலம் பல்வேறுபட்ட சுற்றுலாப் பொதிகள், விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட பயணத் திட்டங்கள், தங்குமிட வசதிகள் மற்றும் அனுபவபூர்வமான சலுகைகள் ஆர்வமுள்ள ஜெர்மன் நுகர்வோருக்கு வழங்கப்பட்டன. மேலும், தொழில்முறை நிபுணர்களுடன் நேருக்கு நேர் உரையாடுவதன் மூலம், இலங்கைக்குப் பயணம் செய்வது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு வருங்காலப் பயணிகள் தெளிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளவும் இந்தத் தளம் வழிவகை செய்தது.
இந்த நேரடித் தொடர்புகள் மூலம், ஜெர்மன் சந்தையில் புதிதாக உருவாகி வரும் பயண ஆர்வங்கள், நுகர்வோர் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் குறித்து இலங்கை சுற்றுலாத் துறையினர் பெறுமதிமிக்க நுண்ணறிவுகளைப் பெற்றுக்கொண்டனர். இறுதி நுகர்வோருடனான இந்த நேருக்கு நேர் விவாதங்கள், தேவைப்பாடுகள் மற்றும் தயாரிப்புத் தேவைகள் குறித்த தொழில்துறையின் புரிதலை மேலும் வலுப்படுத்தியது.
மூலோபாய ரீதியாக, இலங்கை சுற்றுலாத்துறையின் இந்த B2C (Business-to-Consumer) ஊக்குவிப்பு முயற்சிகள், B2B தளங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு ஊக்கியாகச் செயல்படுகின்றன. இது வர்த்தகப் பங்காளிகளுடன் இணைந்து, இறுதி முடிவெடுப்பவர்களான பயணிகளுடன் நேரடித் தொடர்பை உறுதி செய்கிறது. பரிசுப் பொருட்கள், போட்டிகள், அனுபவபூர்வமான ஈடுபாடுகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நுகர்வோர் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் பார்வையாளர்களுடன் ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தின. இது இலங்கையை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த உதவியதோடு, ஒரு கட்டாயமாகப் பார்க்க வேண்டிய நீண்ட தூரப் பயணத் தலம் என்ற இலங்கையின் நிலையையும் உறுதிப்படுத்தியது.