2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 (Super Eight) சுற்றுப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 51 ஓட்டங்கள் வித்தியாசத்திலான தோல்விக்கு, ஆட்டத்தின் சூழலையும் பல்லேகல ஆடுகளத்தின் தன்மையையும் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியதே காரணம் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இலக்கை விரட்டும்போது துடுப்பாட்ட வீரர் கமில் மிஷாராவின் அணுகுமுறையை சங்கக்கார கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இலங்கை பந்துவீச்சாளர்களின் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்கு முற்றிலும் மாறாக துடுப்பாட்ட வீரர்களின் செயல்பாடு அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “கடுமையான கைகள் (Hard hands), கமில் மிஷாராவின் மந்தமான ஆட்டம் மற்றும் ஆடுகளத்தின் சூழலைப் புரிந்துகொள்ளாமை ஆகியவை அவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
கண்டியின் பல்லேகல மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்த போட்டியில், 147 ஓட்டங்கள் என்ற மிதமான இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி, 16.4 ஓவர்களில் வெறும் 95 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 51 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
