யாழ்ப்பாணத்தில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள், கட்டாய சூழல் அனுமதி (Environmental Clearance) பெறப்படாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து கடும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் அவசியமான ‘சூழல் தாக்க மதிப்பீட்டு’ (EIA) அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னதாக, ஆரம்பகட்ட நிலம் திருத்தும் பணிகள் மற்றும் அணுகுசாலை மேம்பாடுகள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன என சூழலியல் குழுக்களும் சிவில் அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன.
வட மாகாணத்தில் ஒரு பாரிய “விளையாட்டு நகரத்தை” (Sports City) உருவாக்கும் இலங்கையின் லட்சியத் திட்டம், தேவையான சூழல் அனுமதி இல்லாத காரணத்தால் தற்போது பெரும் தடையை எதிர்நோக்கியுள்ளதுடன், விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
2025 செப்டெம்பரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பல பில்லியன் ரூபா பெறுமதியான திட்டம், யாழ்ப்பாணம் மண்டைதீவுபகுதியில் 40,000 ஆசனங்களைக் கொண்ட சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கை அமைப்பதை நோக்கமாகக் கொண்டது. எவ்வாறாயினும், ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது இறுதி சூழல் அனுமதி வழங்கப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
சூழலியல் ஆர்வலர் சஜீவ சமிகர இது குறித்துக் கூறுகையில், மண்டை தீவில் கிரிக்கெட் விளையாட்டரங்கு அமைப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்ட நிலம் ஒரு உணர்திறன் மிக்க சதுப்புநிலச் சூழல் தொகுதி (Wetland Ecosystem) என்றும், இந்தத் திட்டம் அதன் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். ஜனாதிபதி அடிக்கல் நாட்டியது ஒருபுறமிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) ஏற்கனவே சூழல் அனுமதியின்றி சட்டவிரோதமாக சதுப்புநிலத்தை நிரப்பியும், வேலி அமைத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டரங்கு மட்டுமன்றி, கோல்ஃப் மைதானம், குடியிருப்பு அலகுகள் மற்றும் விடுதி வளாகம் என ஒரு பெரிய விளையாட்டு நகரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. இது சதுப்புநிலத் தொகுதியின் முழுமையான அழிவுக்கும் யாழ்ப்பாணக் கடலேரியின் (Lagoon) சிறுதொழில் மீன்பிடித் தொழிலின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என அவர் எச்சரித்தார்.
“கட்டுமானப் பணிகள் காரணமாக வேலி நெடுகிலும் ஏராளமான பறவைகள் இறந்து கிடப்பதைக் கவனித்துள்ளோம். இந்தப் பருவகாலத்தில் சுமார் இரண்டு மில்லியன் புலம்பெயர் பறவைகள் தங்கும் இடமாக இப்பகுதி உள்ளது. இது சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறையை முழுமையாக மீறும் செயலாகும். தற்போது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அனுமதி பெற அதிகாரிகள் முயல்வதாகத் தெரிகிறது, இதுவும் சட்டவிரோதமானது. முறையான சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility Study) இன்றி இத்தகைய பாரிய திட்டத்தை முன்னெடுக்க முடியாது,” என அவர் குற்றம் சாட்டினார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ கூறுகையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்த போதிலும், செயல்முறை முடிவதற்கு முன்பே நிலம் சுத்திகரிப்பு மற்றும் வீதிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, கடந்த 18ஆம் திகதி அனைத்து கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்துமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.
வன திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை உள்ளடக்கிய குழு இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், வன திணைக்களத்தின் வரைபடங்களின்படி 46 ஏக்கர் திட்டப் பகுதிக்குள் கண்டல் காடுகள் (Mangroves) அல்லது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் இல்லை என்று கூறப்பட்டாலும், முழுமையான சூழல் ஆய்வு முடியும் வரை பணிகளைத் தொடர முடியாது என அவர் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையில், சுற்றாடல் நீதிக்கான மையம் (CEJ) இந்த விவகாரத்தில் தலையிடுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளது. பாரிய அளவிலான நிலம் நிரப்பப்படுவது வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் ஈடுசெய்ய முடியாத வாழ்விட இழப்பை ஏற்படுத்தும் என அந்த மையம் எச்சரித்துள்ளது.
சூழல் அனுமதி இன்றி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சின் கருத்தைப் பெற ‘டெய்லி மிரர்’ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
DAILY MIRROR
