மின்சக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரை பதவி நீக்கம் செய்த பின்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்.
தரமற்ற நிலக்கரி விநியோகம்: நிபுணர் குழு நியமனம் ஒரு பயனற்ற செயல் உண்மைகளை மறைக்கும் முயற்சி என ஊடக சந்திப்பில் மின்சார நுகர்வோர் சங்கத்தின் (ECA) பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தரமற்ற நிலக்கரி விநியோகம் குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழுவை நியமித்துள்ளமையானது ஒரு “பயனற்ற செயல்” (futile exercise) ஆகும். எந்தவொரு நேர்மையான விசாரணையும் தொடங்குவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட மின்சக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்.
குழுவின் சுதந்திரம் குறித்த கேள்வி
இந்தக் குழுவானது அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை மின்சார சபையின் பதில் தலைவர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி விநியோக விவகாரத்தில் அவரே நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டியவர் என தம்மிக குற்றம் சாட்டினார்.
“தொடர்புடைய விலைமனுக்கோரல் செயல்முறையை அங்கீகரித்த பேராசிரியர் ஹேமபாலவே இப்போது இந்தக் குழுவை நியமித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் விசாரணை எப்படி சுதந்திரமாக இருக்க முடியும்? அதே அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரை இந்தக் குழுவில் உள்வாங்கியிருப்பதும் சிக்கலானது. அமைச்சின் படிநிலையில் பணியாற்றும் ஒரு அதிகாரி, அதே அமைச்சின் செயலாளருக்கு எதிராகச் செயல்படுவாரா?”
உண்மைகளை மறைக்கும் முயற்சி?
இந்தக் குழுவின் கட்டமைப்பு, அமைச்சின் செல்வாக்கிற்கு இடமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது உண்மைகளை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை மறைப்பதற்கே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
-
கணக்காய்வாளர்நாயகம் (Auditor General) திணைக்களம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் சேர்க்கப்படவில்லை. ஒரு நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின் இவர்கள் கண்டிப்பாக உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தின் தலையீடு அவசியம்
தேசிய நிதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தை ஆராயும் குழுவானது பாராளுமன்றத்தினால் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். முறையான விசாரணைக்கு முன்னதாக அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோரை இடைநிறுத்துவது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.