CNN


ஞாயிற்றுக்கிழமையன்று துபாய் நகரம் அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறியிருந்தது. வழக்கமாக குளிர்கால வார இறுதி நாட்களில்—சுற்றுலாப் பயணிகளின் வருகை உச்சத்தில் இருக்கும் சமயத்தில்—கடற்கரைகள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் நிரம்பி வழியும். ஆனால், இன்று நெடுஞ்சாலைகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன;
வானத்தில் இடைவிடாது பறக்கும் விமானங்களின் சத்தமும் இல்லை. எப்போதும் படகுகளாலும் கொண்டாட்டங்களாலும் நிறைந்திருக்கும் ‘துபாய் மெரினா’ பகுதி அசாதாரண அமைதியுடன் காணப்பட்டது.
பல குடியிருப்பாளர்களுக்கு இது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த
கொவிட் 19 ஊரடங்கு காலத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது. உலகின் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றான துபாய் திடீரென மௌனமானது. நகரின் பள்ளிகள் மீண்டும் ஒன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன, குடும்பங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
பாதுகாப்புத் தேடி மக்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வெளி மூடப்பட்டதால், சில குடியிருப்பாளர்கள் நாட்டின் அமைதியான பகுதிகளுக்குச் சென்றனர். ஓமன் எல்லைக்கு அருகில் உள்ள ஹட்டா (Hatta) பகுதியில், ஒரு ஹோட்டல் தனது மாநாட்டு அறையை தற்காலிகப் புகலிடமாக மாற்றியுள்ளது. வெளியேற முடியாமல் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெயர்பெற்ற துபாயில் பொது வெடிகுண்டு புகலிடங்கள் (Public bomb shelters) இல்லை. இதனால், சனிக்கிழமை இரவு பல குடியிருப்பாளர்கள் நிலத்தடி வாகன நிறுத்துமிடங்களில் (Underground parking) தஞ்சம் புகுந்தனர். மேலே கேட்ட வெடிப்புச் சத்தங்களைக் கண்டு அஞ்சிய குழந்தைகளுக்கு, அது ரமலான் கால வாணவேடிக்கை அல்லது இப்தார் நேர பீரங்கி சத்தம் என்று கூறி பெற்றோர்கள் அவர்களைத் தேற்றினர்.
