REUTERS
செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் நகரங்களில் பெரும் வெடிப்புகள் நிகழ்ந்தன.
அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் நீண்டகால பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உலகெங்கிலும் உள்ள நிதிச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன.
இந்தப்போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தெளிவற்ற பதில்களை அளித்த ஒரு நாளைக்குப் பிறகு, இஸ்ரேலின் இந்த இராணுவ நடவடிக்கை இரண்டு வாரங்கள் நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டதாகவும், எதிர்பார்த்ததை விட வேகமாக நகர்ந்து வருவதாகவும் (Reuters) செய்தி நிறுவனத்திற்கு விடயத்தை நன்கறிந்தவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலின் போர்த் திட்டத்தை நன்கு அறிந்த அந்த நபர் கூறுகையில், ஈரானின் ஆட்சியாளர்களை வீழ்த்துவதே இதன் நோக்கம் என்றும், அதை அடைவதற்கு உறுதியான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
முக்கியத் தகவல்கள்:
-
இலக்குகளை அழித்தல்: இஸ்ரேலிய இராணுவம் தனது இலக்குகளின் பட்டியலை திட்டமிட்டதை விட வேகமாக முடித்து வருவதாகவும், ஈரானிய தலைவர்களைக் கொல்வதிலும் அவர்களின் பாதுகாப்பை முறியடிப்பதிலும் ஆரம்பக்கட்ட வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் விடயத்தை நன்கறிந்தவர்கள் தெரிவித்தனர்.
-
அரசியல் அழுத்தம்: இஸ்ரேலின் இலக்குகள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, ஈரானின் எஞ்சியிருக்கும் தலைவர்களுடன் வாஷிங்டன் ஏதேனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடும் என்ற கவலையில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
-
ஈரானுக்குள் நிலைமை: ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB-ன் தெஹ்ரான் தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியது. குண்டுகள் விழுந்து வருவதால் நகரங்களை விட்டு வெளியேற மக்கள் நெடுஞ்சாலைகளில் திரண்டுள்ளனர். தெஹ்ரானைச் சேர்ந்த வங்கி ஊழியர் பிஜன் (32) கூறுகையில், “ஒவ்வொரு இரவும் நானும் என் மனைவியும் (basement) ஒளிந்து கொள்கிறோம். நகரம் முழுவதும் காலியாக உள்ளது. எங்கும் புகையும் இரத்தமுமாக இருக்கிறது” என்றார்.
பொருளாதார தாக்கம்: கச்சா எண்ணெய் விலை ஒரே இரவில் சுமார் 4% உயர்ந்தது. ஐரோப்பாவின் STOXX 600 குறியீடு வர்த்தகத்தின் ஆரம்பத்தில் 3% வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் இந்த வீழ்ச்சி எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்கா தனது பணியாளர்களை வெளியேற உத்தரவு: முதல் நாளிலேயே அயதுல்லா அலி கமேனியை அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் கொன்றது. இது வரலாற்றிலேயே எதிரிப் படைகளால் வான் வழியாக ஒரு நாட்டின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட முதல் நிகழ்வாக இருக்கலாம். தரைப்படை இல்லாமல் வான்வழித் தாக்குதல் மூலம் மட்டுமே ஓர் ஆட்சி முறையை வீழ்த்தினால், அதுவும் ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும்.
இந்தப்போர் ஒரு தூண்டுதலற்ற தாக்குதல் என்று ஈரான் கூறியுள்ளது. இதற்குப் பதிலடியாக அண்டை அரபு நாடுகளின் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியும், உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியும் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
போர் பரவல்: திங்கட்கிழமை முதல், போர் லெபனானுக்கும் பரவியுள்ளது. ஈரானின் நட்பு அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களையும், தெற்குப் பகுதியில் தரைப்படை வலுவூட்டல்களையும் மேற்கொண்டுள்ளது. பெய்ரூட் நகரில் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, பல டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து அவசரமற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஈரானிய ட்ரோன்களால் தாக்கப்பட்ட சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன.
