மார்ச் 3, 2026
வளைகுடா பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வருவதால், இலங்கையின் பொருளாதாரம் கடுமையான அழுத்தத்திற்கு (Stress-test) உள்ளாகக்கூடும் என்று பஹ்ரைனில் இருந்து கருத்து தெரிவித்துள்ள MTI Consulting நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஹில்மி காடர் எச்சரித்துள்ளார்.
சுற்றுலா, தேயிலை ஏற்றுமதி, எரிசக்தி, விநியோகச் சங்கிலி மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் பின்வருமாறு விளக்கியுள்ளார்:
1. சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து
6 வளைகுடா நாடுகளில் இருந்து வாரத்திற்கு சுமார் 140 வணிக ரீதியான விமானச் சேவைகள் இலங்கைக்கு இயக்கப்படுகின்றன. ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு இதுவே முக்கிய வழியாகும். வளைகுடா வான்பரப்புகள் (Airspaces) மூடப்படுவதால், ஐரோப்பிய விமானங்கள் நேரடியாக இலங்கைக்கு வருவதிலும் சிக்கல் ஏற்படும். இதனால் ஹோட்டல் முன்பதிவுகள் (Hotel bookings) உடனடியாகக் குறையும் அபாயம் உள்ளது.
2. ஏற்றுமதி மற்றும் விநியோகச் சங்கிலி
இலங்கையின் அழுகக்கூடிய பொருட்கள் (Perishables) மற்றும் காலக்கெடுவுக்குள் அனுப்பப்பட வேண்டிய ஏற்றுமதிப் பொருட்கள், சரக்கு விமானப் போக்குவரத்து (Cargo flights) பாதிப்பால் பாதிக்கப்படலாம்.
3. தேயிலை ஏற்றுமதி
இலங்கையின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் சுமார் 50 சதவீதம் மற்றும் சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிப் பொருட்கள் மத்திய கிழக்கு நாடுகளை இலக்காகக் கொண்டவை. இந்தப் போர் அந்தச் சந்தையை நேரடியாகப் பாதிக்கும்.
4. வெளிநாட்டுப் பணம் மற்றும் வேலைவாய்ப்பு
வளைகுடா நாடுகளில் சுமார் 10 லட்சம் (1 million) இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். அங்குள்ள வணிகங்கள் பாதிக்கப்பட்டால், அது வேலைவாய்ப்பு எண்ணிக்கையை குறைப்பதோடு, இலங்கைக்கு அனுப்பப்படும் பணப்பரிமாற்றத்தையும் (Remittances) பாதிக்கும்.
5. எரிசக்தி மற்றும் எண்ணெய் விலை
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பாதைகள் பாதிக்கப்படுவதால், உலகச் சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அதிக இறக்குமதி செலவு காரணமாக இலங்கையிலும் எண்ணெய் விலைகள் உயர வாய்ப்புள்ளது.