கொழும்பு, மார்ச் 6 – ஈரான் நாட்டுக்குச் சொந்தமான கப்பல் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர், அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு அது குறித்து அறிவித்ததா என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மௌனம் காப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கவலை கொள்கிறது. நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள்ளும், ‘கொழும்பு பாதுகாப்பு கூட்டமைப்பின்’ (Colombo Security Conclave) வரம்பிற்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை குறித்து, அதற்கு முன்னதாக அமெரிக்காவினால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எமது பிரத்தியேக பொருளாதார வலயத்தை ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன. இது எமது வர்த்தக நலன்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கப்பல் போக்குவரத்து செலவுகள் மற்றும் காப்புறுதி (Insurance) கட்டணங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது வாழ்க்கைச் செலவு உட்பட நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இலங்கைக்கு அருகாமையில் இனிமேல் இவ்வாறான இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்பதற்கான உறுதியினை இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் கோர வேண்டும். மேலும், இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி அதிகாரிகளுடன் அரசாங்கம் கலந்துரையாட வேண்டும்.”