ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தாபா கமேனி, அந்நாட்டின் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் நாளில் காயமடைந்ததாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், அவர் “பாதுகாப்பாகவும் நலமுடனும்” இருப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் மகன் தெரிவித்துள்ளார்.
மொஜ்தாபா கமேனி காயமடைந்ததாக நான் செய்தி கேள்விப்பட்டேன். இது குறித்துத் தொடர்புடைய சில நண்பர்களிடம் கேட்டேன். இறைவனுக்கு நன்றி, அவர் பாதுகாப்பாகவும் நலமுடனும் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்,” என்று அரசாங்க ஆலோசகராகவும் இருக்கும் யூசெப் பெசெஷ்கியான் தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டுள்ளார்.
அரசுத் தொலைக்காட்சி, கமேனியை “ரம்ஜான் போரில் காயமடைந்த ஒரு வீரர்” என்று தற்போதைய போரைக் குறிப்பிட்டு அழைத்த போதிலும், அவரது காயம் குறித்து எதனையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. பிப்ரவரி 28 அன்று நடந்த வான்வழித் தாக்குதலில் அவரது தந்தை அலி கமேனி கொல்லப்பட்டபோது, மொஜ்தாபா கமேனியின் கால்களில் காயம் ஏற்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் இன்று அதிகாலை செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
