கொழும்பு, மார்ச் 12 –மத்திய கிழக்கு போர் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தால், அதன் எதிர்கால விளைவுகளை யாராலும் கணிக்க முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, போர் நீடிக்கும் பட்சத்தில் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தடையற்ற எரிசக்தி விநியோகத்தை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
இலங்கை தொழில்முனைவோர் சம்மேளனத்தின் (COYLE) 2026 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், எரிபொருள் விநியோகத்திற்கான மாற்று வழிகளைப் பாதுகாப்பது குறித்து நட்பு நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் பதற்றமான சூழலால் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாகவும், இத்தகைய நிச்சயமற்ற சூழ்நிலைகளில் வர்த்தகம் செய்ய எண்ணெய் நிறுவனங்களே தயங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“சில எரிபொருள் டெண்டர்கள் தற்போது ரத்து செய்யப்படுகின்றன என்பதை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். தடையற்ற எரிசக்தி விநியோகத்தை இப்போது உறுதி செய்ய முடியும். இருப்பினும், அதிகபட்சமாக இரண்டு மாத காலத்திற்கு மட்டுமே இதை நம்பகத்தன்மையுடன் கணிக்கவும் உத்தரவாதம் அளிக்கவும் முடியும். இந்த இரண்டு மாத காலத்திற்கு அப்பாற்பட்டு மோதல் நீடித்தால், தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையிலான கணிப்புகள் பலிக்காது,” என்று அவர் கூறினார்.
மேலும், தொழில்நுட்பமும் அறிவியலும் போர்க்கலைக்கு முன்னோடியில்லாத சக்தியைக் கொடுத்துள்ள ஒரு யுகம் இது என்பதால், இத்தகைய முன்னேறிய இராணுவ நடவடிக்கைகளின் நீண்டகால தாக்கத்தை கணிப்பது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
“குறுகிய கால கணிப்புகள் சாத்தியம், ஆனால் அதற்கு மேல் போர் நீடித்தால் யாராலும் விளைவுகளைச் சரியாகக் கணிக்க முடியாது. எனவே, அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிசக்தி விநியோகம் பராமரிக்கப்படும் என்ற உறுதியை அளிக்க முடியும், இருப்பினும் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். நான் ஒரு எண்ணெய் கிணற்றின் உரிமையாளரோ அல்லது எந்தவொரு எண்ணெய் நிறுவனத்தின் பிரதிநிதியோ அல்ல. இந்த நடவடிக்கைகள் தனிப்பட்ட லாபத்திற்காக மேற்கொள்ளப்படுபவை அல்ல. இருப்பினும், ஒரு அரசாங்கமாக, தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது,” என்றார்.
“2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியானது உலகளாவிய விநியோக பாதைகள் துண்டிக்கப்பட்டதாலோ அல்லது எரிபொருள் இருப்புக்கள் தாக்கப்பட்டதாலோ ஏற்படவில்லை, மாறாக எரிபொருளைப் பெறுவதற்கான டாலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டது. ஆனால் இன்று அந்தப் பிரச்சினை இல்லை, ஏனெனில் நம்மிடம் 7.2 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு கையிருப்பு உள்ளது. விநியோக பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக மட்டுமே இனி எதிர்கால நெருக்கடி ஏற்படக்கூடும். இத்தகைய அபாயங்களை எதிர்பார்த்து, மாற்று வழிகளைப் பாதுகாக்க நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் நாம் குறுகிய காலத்தில் அடைந்த குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை முடக்கிவிடும். எனவே, அரசாங்கத்தின் விரிவான திட்டம் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
இந்தச் சவாலை எதிர்கொள்ள அனைவரும் கூட்டாகப் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும் என்றும், அத்தகைய கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே அனைவரின் நலனுக்காகவும் இதை முறியடிக்க முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
