மார்ச் 15 (இந்தியா டுடே) – அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வங்கிகள் மற்றும் பொருளாதார மையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்று ஈரான் எச்சரித்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலுள்ள சில சர்வதேச வங்கிகள் தங்கள் கிளைகளை மூடிவிட்டு அலுவலகங்களை காலி செய்துள்ளன.
இந்த எச்சரிக்கையை ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) மத்திய தலைமையகம் விடுத்துள்ளது. வளைகுடா பிராந்தியத்திலுள்ள வங்கிகளின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பொதுமக்கள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று ஈரானின் கூட்டு இராணுவக் கட்டளையகம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளிலுள்ள பல உலகளாவிய வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சிட்டிகுரூப் (Citigroup) மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) ஆகிய வங்கிகள் துபாயில் உள்ள தங்கள் அலுவலகங்களிலிருந்து சில ஊழியர்களை வெளியேற்றியதுடன், அவர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. இதேபோல், எச்.எஸ்.பி.சி (HSBC) வங்கி பாதுகாப்பு கருதி கட்டாரில் உள்ள தனது கிளைகளை தற்காலிகமாக மூடியுள்ளது.
தாக்குதலும் பின்னணியும்: தேஹ்ரானில் உள்ள ஈரானின் மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் ஒன்றான வங்கி செபா (Bank Sepah) உடன் தொடர்புடைய நிர்வாகக் கட்டிடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஈரானின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் காரணம் என்று ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாகத் தங்கள் எதிரிகளுடன் தொடர்புடைய நிதி மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகள் மீது பதிலடி கொடுக்க ஈரான் பரிசீலித்து வருகிறது.
வளைகுடா நகரங்களிலுள்ள வங்கிகள் பொதுவாக வணிக வளாகங்கள், அலுவலக கோபுரங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் நிறைந்த பரபரப்பான வணிகப் பகுதிகளில் அமைந்துள்ளன. இதனால், வங்கிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, துபாய், தோஹா மற்றும் பஹ்ரைன் போன்ற முக்கிய நிதி மையங்களின் பெரும் பகுதிகளைப் பாதிக்கக்கூடும்
