ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் கப்பல்களை அனுப்பும் திட்டம் தற்போது ஜப்பானிடம் இல்லை என்று பிரதமர் சனாட்சே தகைச்சி (Sanae Takaichi) திங்கள்கிழமை தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நட்பு நாடுகளிடம் உதவி கோரியிருந்த நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தகைச்சி, “கடற்படைக் கப்பல்களை அனுப்புவது தொடர்பாக நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களது சட்டக் கட்டமைப்பிற்குள் ஜப்பான் சுயாதீனமாக என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம்,” என்று கூறினார்.
சனிக்கிழமை சமூக வலைதளப் பதிவொன்றில் டிரம்ப் குறிப்பிடுகையில், “சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள்” இப்பகுதிக்குக் கப்பல்களை அனுப்பும் என்று நம்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், டோக்கியோவிற்கு இதுவரை முறையான கோரிக்கை எதுவும் வரவில்லை என்று தகைச்சி கூறினார்.
“ஜப்பானிய அரசாங்கம் தற்போது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசித்து வருகிறது. ஜப்பான் தொடர்பான கப்பல்களையும், அவற்றின் ஊழியர்களின் உயிர்களையும் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு ஜப்பானின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் தகைச்சி மற்றும் டிரம்ப் இடையே நெருக்கமான நட்பு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் வரும் வியாழக்கிழமை வாஷிங்டனில் மீண்டும் சந்திக்க உள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத அரசியலமைப்பு (pacifist constitution), சர்வதேச மோதல்களைத் தீர்க்கும் வழியாகப் போரை நிராகரிக்கிறது. இதன் காரணமாக ஜப்பானின் தற்காப்புப் படைகள் (Self-Defense Forces) சட்டரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஜப்பானின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு ஆதரவாக தகைச்சி வாதிட்டு வருகிறார்.
