CNN
லெபனானில் உள்ள 69,900-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் உடல் மற்றும் உளவியல் ரீதியான பெரும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதாக ‘கேர் இன்டர்நேஷனல்’ (CARE International) மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. போதிய வசதிகள் இல்லாததால், தாய்மார்கள் கார்களிலும் பள்ளிகளிலும் பிரசவிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த தாய்மார்கள் தனிமனித ரகசியம் (Privacy), சுத்தமான தண்ணீர் அல்லது மருத்துவ ஆதரவு எதுவுமின்றி பிரசவ வலியை அனுபவித்து வருகின்றனர். லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களால் சாலைகள் சேதமடைந்துள்ளதாலும், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாலும், மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாலும் சுகாதார நிலையங்களை அணுகுவதில் பெண்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர்.
“சிசேரியன் (Cesarean) மூலம் குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண், தனது 4 நாள் குழந்தையுடன் நடைபாதையில் படுத்திருப்பதை நான் கண்டேன்,” என்று லெபனானில் உள்ள கேர் இன்டர்நேஷனல் அமைப்பின் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய ஆலோசகர் நூர் பெய்டூன் (Nour Beydoun) தெரிவித்துள்ளார்.
“அவர் ஒரு பாதுகாப்பான இடத்தில் ஓய்வெடுத்து உடல் நலம் தேற வேண்டும். ஆனால், தனக்கு இன்னும் வலி இருப்பதாகவும், அறுவை சிகிச்சை காயங்களைச் சரியாகப் பராமரிக்க முடியவில்லை என்றும் அவர் எங்களிடம் கூறினார். தெருவில் வசித்துக்கொண்டு தனது பிறந்த குழந்தையைப் பாதுகாக்க முயற்சிக்கும் ஒரு தாயைப் பார்ப்பது நெஞ்சை உலுக்குகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
லெபனானில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா சபை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களும் சிறுமிகளும் ஆவர். தீவிரமடைந்து வரும் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு, பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலியல் சுரண்டல் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக பெய்டூன் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தச் சூழல் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், பெண்களின் கண்ணியத்தையும் பறிக்கிறது,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
