இஸ்ரேலின் மையப்பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அவசரகால பதில் சேவை தெரிவித்துள்ளது.
ரமத் கான் நகரில் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்த ‘மாகன் டேவிட் அடோம்’ (MDA) மருத்துவ உதவியாளர்கள், ஏவுகணைச் சிதறல்களால் (Shrapnel) பலத்த காயமடைந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். MDA வெளியிட்ட வீடியோவில், ஒரு கட்டிடம் பகுதியளவு சேதமடைந்திருப்பதையும், வீதி முழுவதும் இடிபாடுகள் சிதறிக் கிடப்பதையும் காண முடிகிறது.

இஸ்ரேலின் மையப்பகுதிக்கு மேலே ‘கிளஸ்டர்’ (Cluster munition – கொத்து குண்டுகள்) வகை ஆயுதம் போன்ற ஒன்று வானில் வெடித்ததை CNN கேமராக்கள் பதிவு செய்துள்ளன. டெல் அவிவ் நகரின் ‘சவிடார்’ (Savidor) ரயில் நிலையம் மற்றும் அதற்கு அருகிலுள்ள பெட்டா திக்வா (Petah Tikva), ரோஷ் ஹாஅயின் (Rosh HaAyin), கஃபர் காசிம் (Kafr Qasim) ஆகிய நகரங்களில் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. வானில் சிறிய குண்டுகள் சிதறி விழுந்து தாக்குதலை ஏற்படுத்துவதை அந்த வீடியோ காட்டுகிறது.
டெல் அவிவ் நகருக்கு வடக்கே உள்ள பெனி பிராக் (Beni Brak) நகரிலும் ஏவுகணைச் சிதறல்கள் விழுந்ததில் ஒருவர் லேசான காயமடைந்துள்ளதாக MDA தெரிவித்துள்ளது.