தெற்கு இஸ்ரேலிய நகரங்களான டிமோனா மற்றும் ஆராட் (Arad) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
இஸ்ரேலிய அவசரகால அதிகாரிகளின் கூற்றுப்படி, 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சனிக்கிழமை மாலை, அணுசக்தி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரங்களைத் தாக்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளால் (ballistic missiles), ஆராட் நகரில் 84 பேரும், டிமோனாவில் 78 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
டிமோனா நகரத்திற்கு வெளியே சுமார் எட்டு மைல் (13 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று ஈரானின் நடான்ஸ் (Natanz) அணுசக்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி முன்னதாகத் தெரிவித்தது. அங்கு “நிலையத்திற்கு வெளியே கதிர்வீச்சு மட்டங்களில் எந்த அதிகரிப்பும்” பதிவாகவில்லை என்று IAEA கூறியுள்ளது.
