மின்வெட்டுத் திட்டங்கள் எதுவும் இல்லை; மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை
2026 மார்ச் 22 |
– தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
“இந்தச் சந்தர்ப்பத்தில் மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் எண்ணம் எங்களிடம் இல்லை,” என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“மின்சாரம் மட்டுமல்ல, தடையற்ற எரிபொருள் விநியோகத்தையும் வழங்கவே நாங்கள் விரும்புகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அரசிற்குச் சொந்தமான இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருண, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
நேற்று இரவு கணிசமான விலை அதிகரிப்புச் செய்யப்பட்ட போதிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு கூட்டுத்தாபனம் 204.56 ரூபாய் நட்டத்தை எதிர்கொள்வதாக அவர் கூறினார்.
“இனிவரும் காலங்களில், இரவு நேரங்களில் டீசல் மூலமே உங்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது. டீசலின் விலை 140 ரூபாயால் அதிகரித்துள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“மக்கள் இதனைப் புரிந்துகொண்டு, இந்த நெருக்கடியின் சுமையைக் குறைக்க குறைந்தபட்சம் ஒரு விளக்கு அல்லது விளம்பரப் பலகை அல்லது வீதி விளக்கை அணைக்க முயற்சி செய்ய வேண்டும்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்
