BBC
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலானது, 1970-களில் ஏற்பட்ட அடுத்தடுத்த எரிசக்தி அதிர்ச்சிகளை விடவும் மோசமான, மற்றும் 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது எடுத்த இராணுவ நடவடிக்கையின் ஆரம்பகட்ட தாக்கங்களுக்கு நிகரான ஒரு எரிசக்தி நெருக்கடியைத் தூண்டக்கூடும்.
கான்பெராவில் (Canberra) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ் பிரோல் (Fatih Birol) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“நம்மில் பலருக்கு 1970-களில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு எண்ணெய் நெருக்கடிகள் நினைவிருக்கும்… அக்காலகட்டத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு நெருக்கடியின் போதும் உலகம் ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை இழந்தது; இரண்டும் சேர்ந்து ஒரு நாளைக்கு 10 மில்லியன் பீப்பாய்கள்,” என்று பிரோல் கூறினார்.

“இன்றைய நிலவரப்படி, நாம் ஒரு நாளைக்கு 11 மில்லியன் பீப்பாய்களை இழந்துள்ளோம், இது முந்தைய இரண்டு பெரிய எண்ணெய் அதிர்ச்சிகளையும் விட அதிகமாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
முக்கிய போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரானின் தடையால் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் முடக்கப்பட்டுள்ளதால், இந்த நெருக்கடியின் எரிசக்தி விளைவுகளிலிருந்து எந்தவொரு நாடும் “தப்பிக்க முடியாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
