கோன்சே ஹபிபியாசாத், மூத்த செய்தியாளர், பிபிசி பெர்சியன் (BBC Persian)
ஈரானின் அணுசக்தி அமைப்பின் (AEOI) மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புஷெர் (Bushehr) அணுமின் நிலைய தளம் மீண்டும் தாக்கப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதலும் நடத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் “நிதி அல்லது தொழில்நுட்ப ரீதியான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை, உயிரிழப்புகளும் இல்லை” என்றும், “நிலையத்தின் எந்தப் பகுதியும்” பாதிக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 17-ஆம் தேதியும் இதே அணுமின் நிலையம் தாக்கப்பட்டதாகவும், அப்போதும் உயிரிழப்புகளோ சேதமோ ஏற்படவில்லை என்றும் ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
“அமைதியான பயன்பாட்டிற்கான அணுசக்தி நிலையங்கள்” மீதான இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள அந்த அமைப்பு, இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு, “குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள நாடுகளுக்கு”, “ஆபத்தான மற்றும் ஈடுசெய்ய முடியாத விளைவுகளை” ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
ஈரானின் தெற்கு நகரமான புஷெரில் அமைந்துள்ள அந்த நாட்டின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையம், ரஷ்யாவின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் நீண்டகாலமாக ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது, இது சர்வதேச தடைகளுக்கும் வழிவகுத்தது. ஜெனிவாவில் நடந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான மூன்றாம் கட்ட மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தை முடிந்த இரண்டு நாட்களில், அதாவது பிப்ரவரி 28 அன்று, அமெரிக்க-இஸ்ரேலிய ஈரான் போர் தொடங்கியது.