போர் தொடங்கிய பிறகு, மொஸ்கோவிலிருந்து தெஹ்ரானுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மாற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். ரஷ்யா தற்போது ஈரானுக்கு ஆளில்லா போர் விமானங்களை வழங்கத் தொடங்கியுள்ளது.
மேற்கத்திய உளவுத்துறை அறிக்கைகள் குறித்து விவாதித்த இரண்டு அதிகாரிகள் ‘ கூறுகையில், “போர் தொடங்கிய சில நாட்களிலேயே ஆளில்லா விமான விநியோகம் குறித்து ஈரானிய மற்றும் ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகள் விவாதிக்கத் தொடங்கினர்” என்று தெரிவித்தனர். இந்த விநியோக நடவடிக்கைகள் மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா ஈரானின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றாகும். ரஷ்யா ஏற்கனவே ஈரானுக்கு முக்கியமான செயற்கைக்கோள் தரவுகள், இலக்குகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் மற்றும் உளவுத் தகவல்களை மனிதாபிமான உதவியுடன் வழங்கி வருகிறது. கடந்த நான்கு வாரங்களில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு எதிராக ஈரான் நடத்திய பழிவாங்கும் தாக்குதல்களில் 3,000-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஈரான் தனது தாக்குதல் திறன்களை மேம்படுத்தவும், அதன் தாக்குதல்களின் செயல்திறனை அதிகரிக்கவும் மேம்பட்ட ரஷ்ய மாடல்களை நாடுகிறது. உக்ரைனில் தனது தாக்குதலை வலுப்படுத்த ரஷ்யாவிற்கு ஈரான் வழங்கி வந்த ‘ஷாஹெட்’ (Shahed) ட்ரோன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஜெரான்-2’ (Geran-2) ரக ட்ரோன்களை ரஷ்யா தற்போது ஈரானுக்கு வழங்குவதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
“ரஷ்யர்கள் ஷாஹெட் விமானங்களின் எஞ்சின்கள், வழிசெலுத்தல் மற்றும் ஜாமிங்-எதிர்ப்பு (anti-jamming) திறன்களில் பல மாற்றங்களைச் செய்து அவற்றை வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளனர்,” என்று ரஷ்யா-ஈரான் உறவுகளை ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் நிகோல் கிராஜெவ்ஸ்கி தெரிவித்தார்.
இதற்கிடையில், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த அறிக்கைகளை மறுத்துள்ளார். “தற்போது பல போலிச் செய்திகள் பரவி வருகின்றன. ஒன்று மட்டும் உண்மை – நாங்கள் ஈரானிய தலைமையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.