லெக்ஸ் ஹார்வி மற்றும் கோச்சா ஓலர்ன் -CNN
இந்த மாத தொடக்கத்தில் ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரானிய ட்ரோன் மூலம் தாக்கப்பட்ட கப்பலில் தேடுதல் நடத்திய பிறகும், தாய்லாந்தைச் சேர்ந்த மூன்று மாலுமிகளை காணவில்லை என தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
தாய்லாந்து கொடி ஏந்திய மயூரி நடாலி (Mayuree Natalee) கப்பல், மார்ச் 11 காலை நீரிணையைக் கடந்து சென்றபோது அதன் பின்பகுதியில் ட்ரோன் தாக்கியது. இதனால் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
“எச்சரிக்கைகளை மீறி, ஹோர்முஸ் நீரிணை வழியாக சட்டவிரோதமாக நுழைய முயன்றதால்” கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியதாக ஈரானின் அரசு சார்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் (Fars) தெரிவித்துள்ளது.
ஓமன் கடற்படையினரால் இருபது மாலுமிகள் மீட்கப்பட்டு காசாப் (Khasab) நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் மூன்று பேர் கடலில் மாயமாகினர்.
மாயமான மாலுமிகளைத் தேடுவதற்காக கடந்த சில வாரங்களாக ஈரான் மற்றும் ஓமனுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கப்பலின் உரிமையாளரான பிரிசியஸ் ஷிப்பிங் பிஎல்சி (Precious Shipping PLC), ஒரு சிறப்பு தேடுதல் மற்றும் மீட்புக் குழுவை நியமித்தது. தீ, புகை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்திருந்த அந்தக் கப்பலில் இக்குழுவினர் விரிவான ஆய்வை மேற்கொண்டனர். இது தேடுதல் பணிகளுக்கு பெரும் தடையாக இருந்ததாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாணிடோன் பச்சின்சாவத் தெரிவித்தார்.
“தேடுதல் குழுவினர் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர், ஆனால் கப்பலில் இருந்த மூன்று மாலுமிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்த நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.”
பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து அரேபிய வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் குறைந்தது 16 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ராஜ்யத்தின் (UK) கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.