BBC ஹியூகோ பச்சேகா மத்திய கிழக்கு செய்தியாளர், பெய்ரூட்-
பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கருதப்படும் ஒன்று அல்லது இரண்டு பேரை மீட்புக் குழுவினர் இன்னும் தேடி வருகின்றனர்.
தாக்குதல் நடந்து 12 மணிநேரம் கடந்துள்ள நிலையில், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த நம்பிக்கையும் இப்போது இல்லை.
மேற்கு பெய்ரூட்டின் வசதியான குடியிருப்புப் பகுதியான தாலத் அல்-கயாட்டில் (Tallet el Khayat) அமைந்திருந்த அந்த 10 மாடி குடியிருப்பு கட்டிடம் தாக்குதலுக்குப் பிறகு முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. இஸ்ரேலால் தாக்கப்பட்ட பல இடங்களில் இதுவும் ஒன்று.
இந்தப் பகுதி இதற்கு முன்னர் இலக்கு வைக்கப்படாத ஒன்று என்பதால், எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அங்குள்ள சிவில் பாதுகாப்புப் படையை வழிநடத்தும் ஜியாத் சமீர் இடானி (Ziad Samir Itani) கூறுகையில், இது “பெய்ரூட்டிற்குப் புதியது” (இதற்கு முன் பெய்ரூட்டின் மையப்பகுதிகள் இப்படித் தாக்கப்பட்டதில்லை) எனத் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாவுடனான போருக்கு மத்தியில், கடந்த ஆறு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் மீட்புக் குழுவினர் மிகுந்த சோர்வடைந்துள்ளனர். இருப்பினும், அவர்கள் தங்களது பணியில் உறுதியாக உள்ளனர். “அவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்” என்று இடானி மேலும் குறிப்பிட்டார்
