ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான கப்பல்களில் உள்ள ஆயிரக்கணக்கான மாலுமிகள் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உணவுத் தட்டுப்பாடு: ஈரானின் கொரம்ஷார் (Khorramshahr) துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பல் ஒன்றில் பணியாற்றும் இந்திய மாலுமி ஒருவர் சிஎன்என் (CNN) செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “கடந்த இரண்டு நாட்களாக குண்டுவெடிப்புகள் இல்லை. ஆனால், இப்போது நாங்கள் உணவு மற்றும் தண்ணீருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். உண்பதற்கும் குடிப்பதற்கும் எதுவும் இன்றி தவிக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
மீறப்படும் போர்நிறுத்தம்: போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், ஈரானின் லாவன் தீவில் (Lavan Island) உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அங்குள்ள மாலுமிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாலுமிகளின் நிலை: லாவன் துறைமுகத்தில் சிக்கியுள்ள மற்றொரு இந்திய மாலுமி, இந்திய மாலுமிகள் சங்கத்திற்கு (FSUI) வாட்ஸ்அப் மூலம் அவசர உதவி கோரியுள்ளார். “ஐயா, என்னைக் காப்பாற்றுங்கள்” (Help me sir) என அவர் உருக்கமாகச் செய்தி அனுப்பியுள்ளார்.
சங்கத்தின் கவலை: “போர்நிறுத்தம் என்று சொல்லப்பட்டாலும், களத்தில் அதற்கு எவ்வித அர்த்தமும் இல்லை. நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகளின் உயிருக்கு இன்னும் ஆபத்து நீடிக்கிறது” என இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோஜ் குமார் யாதவ் கவலை வெளியிட்டுள்ளார்.
போக்குவரத்து பாதிப்பு:
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், நீரிணை வழியாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களுக்கே அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் பாரசீக வளைகுடா பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் இன்னும் தேங்கிக் கிடக்கின்றன. இது உலகளாவிய எரிபொருள் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது