ஜப்பானின் முக்கிய தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அமோரி (Aomori) மாகாணக் கடற்கரையிலிருந்து சுமார் 50 கி.மீ (31 மைல்) தொலைவில் சுனாமி அலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொதுச் ஒளிபரப்புச் சேவையான NHK தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த அலைகள் கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாக பாதுகாப்பான மற்றும் உயரமான இடங்களுக்கு வெளியேறுமாறு ஜப்பானிய அதிகாரிகள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அடுத்த சில நிமிடங்களில் அலைகள் கரையைத் தாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது.
முதல் அலையைத் தொடர்ந்து இன்னும் பெரிய சுனாமி தாக்கக்கூடும்:
ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தற்போது ஏற்பட்டுள்ள முதல் சுனாமி அலையைத் தொடர்ந்து, அதைவிடப் பெரிய அளவிலான அலைகள் கரையைத் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹொக்கைடோ (Hokkaido) மற்றும் இவாட் (Iwate) மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அவசர சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவாட் மாகாணத்தைத் தாக்கிய முதல் சுனாமி அலைகள்: மியாகோ துறைமுகத்தில் கடல் மட்டம் உயர்வு
ஜப்பானின் இவாட் (Iwate) மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளை முதல் சுனாமி அலைகள் வந்தடையத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியாகோ (Miyako) துறைமுகத்தில் சுமார் 40 செ.மீ உயரமான அலை பதிவாகியுள்ளது.
இருப்பினும், ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தனது எச்சரிக்கையில், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள ஹொக்கைடோ (Hokkaido) மற்றும் இவாட் மாகாணங்களின் கரையை 3 மீட்டர் (10 அடி) உயரம் வரையிலான ராட்சத சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று கணித்துள்ளது.
தற்போது பதிவாகியுள்ள சிறிய அலைகள் ஆரம்பம் மட்டுமே என்றும், அதைத் தொடர்ந்து வரும் அலைகள் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களிலேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.