அரசாங்கத் திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழி நிதி மோசடி (Cyber-heist) குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நிபுணர் குழுவில் இடம்பெறுவோர்:
-
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SL-CERT)
-
கொழும்பு பல்கலைக்கழக கணினிப் பாடசாலையின் பீடாதிபதி
-
அரசு பகுப்பாய்வாளர் திணைக்களம் (Government Analyst’s Department)
விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்:
-
எச்சரிக்கையை அலட்சியம் செய்தமை: ஆஸ்திரேலிய நிறுவனத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரி
exportfinance.gov.auஎன்பதாகும். ஆனால், மோசடியாளர்கள் அதனைexportfinance.av.comஎன மாற்றி அனுப்பியுள்ளனர். இந்த மாற்றத்தை ஒரு தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 28 அன்றே சுட்டிக்காட்டி எச்சரித்த போதிலும், அந்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. -
தரவுகள் அழிப்பு: திறைசேரியின் மின்னஞ்சல் கணக்கை யாராவது அத்துமீறி பயன்படுத்தியதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தரவுத்தளத்திலிருந்து (Database) சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் நடக்கின்றன.
-
அதிகாரிகளுக்குத் தடை: இந்த நிதி பரிமாற்றத்துடன் நேரடியாகத் தொடர்புடைய 5 திறைசேரி அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வங்கி விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் 5 திட்டங்களுக்காகப் பெறப்பட்ட கடனை, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் ‘Export Finance Australia’ நிறுவனத்திற்கு மீளச் செலுத்தும் போதே இந்த மோசடி நடந்துள்ளது. மின்னஞ்சல் தொடர்பாடல்களை இடைமறித்து (Compromised), கடன் தொகையை வேறொரு வங்கிக் கணக்கிற்கு மோசடியாளர்கள் திசைதிருப்பியுள்ளனர்.
இந்த விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை ஜூன் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
