BBC
கால்பந்து உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களுக்கான நாளாக அது அமைந்திருந்தது. ஆனால், இத்தனை நட்சத்திரங்களுக்கு மத்தியிலும் லியோனல் மெஸ்ஸி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பிரான்சின் கைலியன் எம்பாப்பே மற்றும் நோர்வேயின் எர்லிங் ஹாலாண்ட் ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்து உலகக் கிண்ணக் கால்பந்து தொடரை அதிரவைத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவருக்கான களம் தயாரானது. ஆனால், இது ஒரு சாதாரண ஆட்டமாக இருக்கவில்லை; இது ஒரு முதன்மையான ஆட்டம், மெஸ்ஸியின் அதிரடி ஆட்டம்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் அவரது முதலாவது ‘ஹெட்ரிக்’ (hat-trick) சாதனை, மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையைச் சமன் செய்யும் வகையிலான அவரது 16ஆவது உலகக் கிண்ண கோல், மற்றும் அவரது வயதைத் தாண்டியும் அவர் இன்னும் களத்தில் ஜொலிக்கிறார் என்பதற்கான மற்றுமொரு சான்றாக இந்த ஆட்டம் அமைந்தது.
அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதுடன், அந்த வெற்றியின் மையப்புள்ளியாக மெஸ்ஸி திகழ்ந்தார். கன்சாஸ் சிட்டியின் வானலையில் சூரியன் மறையத் தொடங்கிய வேளையில், 38 வயதான மெஸ்ஸி, ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடிய வரலாற்றின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் – இதன் மூலம் தனது சக போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை ஒரு நாள் வித்தியாசத்தில் அவர் முறியடித்தார்.
2006 ஜெர்மனி உலகக் கிண்ணத் தொடரில் 18 வயதான இளைஞனாக அறிமுகமாகி இன்றுடன் சரியாக 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த விளையாட்டின் மிகச்சிறந்த சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மெஸ்ஸி, தனது நாட்டிற்காக விளையாடும் 200ஆவது போட்டியில் மீண்டும் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் அடித்த முதல் கோலுக்குப் பிறகு, போட்டியின் முப்பது நிமிடங்களைக் கடந்த வேளையில், மெஸ்ஸியின் காலணி அல்ஜீரிய வீரர் ஐசா மாண்டியின் (Aissa Mandi) குதிங்காலில் பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. எனினும், நடுவர்களால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதனை அர்ஜென்டின அணி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.
போட்டிக்குப் பின்னர் பேசிய மெஸ்ஸி: “இதை எனது குடும்பத்தினருடனும், எப்போதும் என்னுடன் இருக்கும் எனது சக வீரர்களுடனும் கொண்டாடுவது ஒரு அழகான தருணம். இந்த அணி மிகவும் ஒற்றுமையான, பலமான ஒரு குழுவாகும். நான் நன்றாக உணர்கிறேன்; ஒரு கடினமான போட்டியில் வெற்றி பெற்றது எங்களது அதிர்ஷ்டம். முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்குவது முக்கியமானது.
ரசிகர்களுக்கு எனது நன்றிகள், ஏன்னெனில் அர்ஜென்டினா இதன் மீது எவ்வளவு பைத்தியமாக இருக்கிறது என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் – அரங்கம் மீண்டும் ரசிகர்களால் நிறைந்தது. இப்போது நான் அனுபவிக்கும் அனைத்தும் எனக்குக் கிடைத்த கூடுதல் போனஸ் ஆகும். எனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் கண்ட கனவுகள் அல்லது அதற்கும் மேலான அனைத்தையும் அடையும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது,” என்றார்.
அர்ஜென்டினாவின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni) மேலும் கூறுகையில், “மெஸ்ஸியை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக, இது போன்ற விஷயங்களைக் காண அவர் நம்மைப் பழக்கப்படுத்தியுள்ளார், மேலும் அவர் விளையாடுவதைப் பார்க்கும் அனைவருக்கும் அவர் ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார்,” என்றார்.
‘மெஸ்ஸி தனது முதல் உலகக் கிண்ண கோலை போலக் கொண்டாடுகிறார்’

போட்டி தொடங்கிய நான்கு நிமிடங்களிலேயே, மெஸ்ஸி பந்தைக் கடத்திச் சென்று அல்ஜீரியாவின் கோல்கீப்பர் லூகா சிடானைத் (Luca Zidane) தாண்டி கோல் அடித்தார். ஆனால், அது ‘ஆப்சைட்’ (offside) என அறிவிக்கப்பட்டதால் அந்தத் தருணம் தட்டிப்போனது. இருப்பினும், ரசிகர்கள் உலகக் கிண்ணத்தையே வென்றது போல் கொண்டாடினர்.
ஆனால், 18ஆவது நிமிடத்தில் மெஸ்ஸிக்கான வரலாற்றுத் தருணம் வந்தது. கோல் எல்லையிலிருந்து 25 யார்டு தொலைவில் இருந்த அவர், பந்தைத் தனது இடது காலிற்கு மாற்றி, கோல் போஸ்ட்டின் வலது மேல் மூலையை நோக்கி மிக நேர்த்தியாக உதைத்தார். பிரான்சின் புகழ்பெற்ற வீரர் ஜினெடின் சிடானின் மகனான கோல்கீப்பர் சிடான், பந்தைத் தடுக்க இரு கைகளையும் நீட்டிய போதிலும், அந்த உதை மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அர்ஜென்டின ரசிகர்கள் மெஸ்ஸியின் 14ஆவது உலகக் கிண்ண கோலைக் கண்ணீருடன் கொண்டாட, கன்சாஸ் சிட்டி அரங்கம் அதிரும் சத்தத்தால் நிறைந்தது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாலையின் தொடக்கமாக அமைந்தது.
எவர்டன் அணியின் முன்னாள் மிட்ஃபீல்டர் லியோன் ஒஸ்மான் கூறுகையில், “மெஸ்ஸி தனது முதல் உலகக் கிண்ண கோலை அடிப்பது போல் இதைக் கொண்டாடுகிறார். அவரது திறமையைப் பார்க்கும்போது, அவருக்கு வயதே ஆகாதது போல் தோன்றுகிறது. பந்தை அவர் கையாண்ட விதமும், அதை முடித்த விதமும் அற்புதம்,” என்றார்.
உலகக் கிண்ண மேடையில் தனது முதல் அறிமுகத்திலிருந்து இரண்டு தசாப்தங்களைக் கடந்து, தற்போது தனது 27ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் மெஸ்ஸி, தனது வயதைத் தொடர்ந்து சவாலுக்கு உட்படுத்தி வருகிறார். போட்டி முழுவதும், அவர் அர்ஜென்டினாவின் அடுத்த நகர்வுகளைத் துல்லியமாகக் கணித்து விளையாடினார். அவர் உடல் தகுதியுடனும், வேகமாகவும், எதிரணிக்கு அச்சுறுத்தலாகவும் காணப்பட்டார்.
60 நிமிடங்களுக்குப் பிறகு, மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் அடித்தார். கோல்கீப்பர் சிடான் செய்த தவறால் பந்து மெஸ்ஸியின் பக்கம் வந்தது. வழமையான நிதானத்துடன், மெஸ்ஸி பந்தைக் கோல் வலைக்குள் செலுத்தி, உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க இன்னும் ஒரு கோல் மட்டுமே தேவை என்ற நிலைக்கு வந்தார். இதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றார்.
35 வயதைக் கடந்த பிறகு, அவர் 10 உலகக் கிண்ண கோல்களை அடித்துள்ளார் – இது ஹாரி கேன், டியாகோ மரடோனா, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் தியரி ஹென்றி ஆகியோர் தங்களது ஒட்டுமொத்த உலகக் கிண்ண வாழ்க்கையில் அடித்த மொத்த கோல்களை விட அதிகமாகும்.
வரலாற்றுத் தருணம்
76ஆவது நிமிடத்தில், மாற்று வீரராகக் களம் புகுந்த நிகோ கோன்சாலஸின் (Nico Gonzalez) உதவியோடு மெஸ்ஸி தனது ‘ஹெட்ரிக்’ சாதனையை நிறைவு செய்தார். இதன் மூலம் உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரலாற்றில் அதிக கோல் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (Miroslav Klose) சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார்.
தனது கைகளை உயர்த்தி, கண்களை வானோக்கிக் காட்டி, ஆயிரக்கணக்கான அர்ஜென்டின ரசிகர்கள் தனது பெயரை உச்சரித்துக் கொண்டாடுவதை அவர் ஏற்றுக்கொண்டார். மெஸ்ஸிக்கே கூட இந்தத் தருணம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. மைதானமே சத்தத்தால் நிறைந்திருக்க, தனக்கு ஆதரவளித்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய போது, ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்குத் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.
போட்டி முடிந்த பிறகும், ஆயிரக்கணக்கான அர்ஜென்டின ரசிகர்கள் அரங்கத்தில் தங்கி தங்களது கொண்டாட்டத்தைத் தொடர்ந்தனர். மைதானம் முழுவதும் நீலம் மற்றும் வெள்ளை நிறக் கடலாகக் காட்சியளித்தது. பல ரசிகர்கள் மெஸ்ஸியின் பெயர் பொறித்த ஆடைகளை அணிந்திருந்தனர், மற்றவர்கள் அவரது உருவப் படங்களைத் தங்களது உடலில் பச்சை (tattoo) குத்தியிருந்தனர்.
அவர்களைப் பொறுத்தவரை, அவர் ஒரு சாதாரண வீரர் மட்டுமல்ல. ‘ஹீரோ’, ‘ஐகான்’, ‘எங்கள் மகன்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியே ரசிகர்கள் அவரை விவரித்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜென்டினா உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு அவர் உத்வேகமாக இருந்தார். மெஸ்ஸி தனது நாட்டை மீண்டும் ஒருமுறை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என்பதை யார் தான் மறுக்க முடியும்?
மெஸ்ஸி சிவப்பு அட்டை (Red Card) பெறாமல் தப்பியது அதிர்ஷ்டமா?
முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலையில் இருந்தபோது, மெஸ்ஸி செய்த ஒரு டேக்கிளிற்காக (challenge) அவருக்குச் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியிருக்கும்.
அவரது காலணிகள் அல்ஜீரிய வீரர் மாண்டியின் காலின் பின்புறத்தில் படுவது போல் தெரிந்த போதிலும், நடுவர் சைமன் மார்சினியாக் (Szymon Marciniak) அல்லது வீடியோ உதவி நடுவர் (VAR) ஆகிய இருவருமே அதற்கு மேல் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை எனக் கருதினர்.
மான்செஸ்டர் சிட்டியின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரர் நெடும் ஒனுவோஹா (Nedum Onuoha) ஈஎஸ்பிஎன் (ESPN) ஊடகத்திடம் கூறுகையில், “அதற்குச் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தத் தருணம் தவறவிடப்பட்டது. அந்த வீரர் தரையில் விழுந்தபோது, மெஸ்ஸியின் முகத்தில் ஒருவித கவலை தெரிந்தது, ஏனெனில் அவர் தனக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயலைச் செய்திருந்தார்,” என்றார்.
ஆனால், பிரான்ஸ் மற்றும் அர்செனல் அணியின் முன்னாள் உலகப் புகழ்பெற்ற முன்கள வீரர் தியரி ஹென்றி (Thierry Henry) பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் (Fox Sports) ஊடகத்திடம் கூறுகையில், “இத்தகைய சூழ்நிலைகளைச் சரியாக பகுப்பாய்வு செய்யும்போது நோக்கம் (intent) என்பது மிகவும் முக்கியமானது. அதை மீண்டும் பார்க்கும்போது, லியோனல் மெஸ்ஸியின் கவனம் பந்தின் மீதே இருந்தது என்பதும், அவர் யாரையும் காயப்படுத்த முயலவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆம், அங்கே ஒரு மோதல் இருந்தது. ஆனால் எல்லா மோதல்களும் சிவப்பு அட்டைக்குரியவை அல்ல,” என்று மெஸ்ஸிக்கு ஆதரவாகத் தெரிவித்தார்