இண்டஸ்ட்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி (Industrial Asphalts (Ceylon) PLC) நிறுவனத்தின் 50.16% கட்டுப்பாட்டுப் பங்குகளை (controlling stake) கையகப்படுத்துவதற்கான பிணைப்பு ஒப்பந்தங்களில் (binding agreements) அர்கேசியா இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஏடிஎக்ஸ் பார்ட்னர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மீதமுள்ள பங்குகளை வாங்குவதற்கான கட்டாய சலுகை (mandatory offer) வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவினால் தொடங்கப்பட்ட ‘அர்கேசியா ஹோல்டிங்ஸ்’ (Arcasia Holdings) நிறுவனத்தின் துணை நிறுவனமான அர்கேசியா இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் நிறுவனம், இந்த பங்குகளைக் கையகப்படுத்தும் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கவுள்ளது.

செவ்வாய்க்கிழமை (8) வெளியிடப்பட்ட கார்ப்பரேட் அறிவிப்புகளின்படி, இண்டஸ்ட்ரியல் அஸ்பால்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோவிந்தசாமி ரமணன், நிறுவனத்தின் மொத்த சாதாரண வாக்குரிமைப் பங்குகளில் சுமார் 48.03% ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் 1,800,693,010 பங்குகளை விற்பனை செய்வதற்கான பிணைப்பு ஒப்பந்தத்தில் ஜூலை 7 அன்று கையெழுத்திட்டுள்ளார்.
மற்றொரு தனி ஆவண ஒப்பந்தத்தின் மூலம், இந்த கூட்டமைப்பு ஸ்ரீகுமார் பாலசுப்பிரமணியத்திடமிருந்து மேலும் 80,000,000 பங்குகளை (வாக்குரிமையுள்ள பங்குகளின் எண்ணிக்கையில் சுமார் 2.13%) கையகப்படுத்தவுள்ளது.
இரு பரிவர்த்தனைகளும் நிறைவடைந்தவுடன், அர்கேசியா இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் மற்றும் ஏடிஎக்ஸ் பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக 1,880,693,010 பங்குகளைக் கொண்டிருக்கும். இது இண்டஸ்ட்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி நிறுவனத்தின் சாதாரண வாக்குரிமைப் பங்குகளில் 50.16% ஆகும்.
இப்பரிவர்த்தனையானது 1995 ஆம் ஆண்டின் நிறுவனங்களை முழுமையாகக் பொறுப்பேற்றல் மற்றும் இணைப்பதற்கான விதிகளின் கீழ் (Company Take-overs and Mergers Code) வரையறுக்கப்பட்டுள்ள 30% வரம்பைத் தாண்டுவதால், ஏனைய பங்குதாரர்களிடம் உள்ள எஞ்சிய சாதாரண வாக்குரிமைப் பங்குகளை வாங்குவதற்கான கட்டாயச் சலுகையை வழங்கவுள்ளதாக இக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) இந்த பரிவர்த்தனைக்குத் தேவையான அனுமதிகளை வழங்கிய பின்னர், இந்த கட்டாயச் சலுகைக்கான விலை மற்றும் இதர நிபந்தனைகள் அறிவிக்கப்படும்
