இலங்கை அணியின் இளம் சகலதுறை ஆட்டக்காரரான சமிந்து விக்ரமசிங்கவின் பந்துவீச்சு பாணி, தனது பந்துவீச்சு பாணியை ஒத்திருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவிற்கு இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) பாராட்டு தெரிவித்துள்ளார்.

யாழ் கிங்ஸ் (Jaffna Kings) அணி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில், சமிந்துவின் பயிற்சி வீடியோ ஒன்றை பகிர்ந்து, “இவரது பந்துவீச்சு பாணி இங்கிலாந்து அணியின் யாரையாவது உங்களுக்கு நினைவுபடுத்துகிறதா?” என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்ததுடன் இந்த சுவாரஸ்யமான விவாதம் தொடங்கியது.
இதனைக் கவனித்த யாழ் கிங்ஸ் அணியில் விளையாடும் சமிந்துவின் சக வீரரான டேவிட் வீஸ் (David Wiese), ஜோஃப்ரா ஆர்ச்சரின் கணக்கைக் குறிப்பிட்டு (Tag செய்து), “இந்த பந்துவீச்சு பாணியை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்” என்று வேடிக்கையாகக் கருத்துப் பதிவிட்டார்.
இதற்குப் பதிலளித்த ஆர்ச்சர், “நான் பார்த்தவற்றில் இதுவே மிகச் சிறந்தது” (Best one I’ve seen) என்று பதிவிட்டு சமிந்துவைப் பாராட்டியுள்ளார்.
2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் தொடங்கவுள்ள நிலையில், இரு சர்வதேச வீரர்களுக்கும் இடையிலான இந்த சுவாரஸ்யமான இணைய உரையாடல் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
