Tamil Guardian
ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை புரிந்ததாக சர்வதேச நீதிமன்றம் (ICJ) வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த நீதிமன்றம், இக்குற்றத்திற்காக ஒரு நாட்டைப் பொறுப்பாளியாக்குவது இதுவே முதல் முறையாகும். வடக்கு ரக்கைன் மாநிலத்தில் சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டதற்கும், 730,000-க்கும் மேற்பட்டோர் பங்களாதேஷிற்கு விரட்டியடிக்கப்பட்டதற்கும் காரணமான மியான்மரின் நடவடிக்கைகள், ரோஹிங்கியா மக்களை ஒரு இனக்குழுவாக அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை எனச் சர்வதேச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
கொக்ஸ் பஜார் (Cox’s Bazar) முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 1.2 மில்லியன் ரோஹிங்கியா மக்களுக்கு, அவர்கள் ஒன்பது ஆண்டுகளாகக் கோரி வந்த அங்கீகாரம் இதன் மூலம் கிடைத்துள்ளது. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய முழுமையான நீதி இதுவல்ல என்றாலும், இத்தீர்ப்பு எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு உலகளாவிய ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தும்.
இந்தத் தீர்ப்பு இலங்கை தொடர்பாக எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை; எந்தவொரு வழக்கும் அதற்கான சொந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால், 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் முடிவடைந்த இராணுவ நடவடிக்கை, இனப்படுகொலை எனப் பலமுறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் கொழும்பும், அதற்குப் பாதுகாப்பளிக்கும் அரசாங்கங்களும் ‘அழிக்கும் நோக்கம் இருந்ததை நிரூபிக்க முடியாது’ என்பது உள்ளிட்ட பழக்கப்பட்ட வாதங்களையே முன்வைத்துத் தப்பித்து வருகின்றன. அதனால்தான் இந்த வாரத் தீர்ப்பு மிக முக்கியத்துவம் பெறுகிறது.

இனப்படுகொலை நோக்கத்தை நிறுவுவதற்கு மியான்மர் இராணுவத் தளபதிகளின் எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் நீதிமன்றத்திற்குத் தேவைப்படவில்லை. மாறாக, இராணுவ நடவடிக்கையின் போக்கு, அட்டூழியங்கள் நிகழ்ந்த சூழ்நிலைகள் மற்றும் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பரந்த அளவிலான பாகுபாட்டுப் பிரச்சாரம் ஆகியவற்றை நீதிமன்றம் ஆராய்ந்தது. பாரிய படுகொலைகள், பாலியல் வன்முறைகள், தப்பி ஓட முயன்றவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் முழு கிராமங்களும் அழிக்கப்பட்டமை ஆகிய அனைத்தும் ஒருங்கிணைத்துப் பரிசீலிக்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவே தமது படைகள் போரிட்டதாக மியான்மர் முன்வைத்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், முன்வைக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து ‘இனப்படுகொலை நோக்கம்’ என்பதே பெறக்கூடிய ஒரே நியாயமான முடிவு எனத் தீர்ப்பளித்தது.
தமிழர்களைப் பொறுத்தவரை, இவற்றிற்கான ஒற்றுமைகள் மிகத் தெளிவானவை. பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ‘பாதுகாப்பு வலயங்கள்’ மற்றும் வைத்தியசாலைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் இராணுவத் தடுப்பு முகாம்களில் பரவலாக இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளே பதிவு செய்துள்ளன. பல தசாப்தங்களாகத் தொடர்ந்த பாகுபாடுகள் மற்றும் வன்முறைகளால் இலட்சக்கணக்கானோர் தமது வீடுகளையும் நாட்டையும் விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்; அதேவேளை வடக்கு-கிழக்கு எங்கும் சிதறிக் கிடக்கும் மனிதப் புதைகுழிகள் இன்றும் தோண்டப்பட்டு வருகின்றன. இக்குற்றங்கள் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் எதிராகப் பேரழிவு தரும் அளவில் இழைக்கப்பட்டவை.
ஆனால், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக இருக்கும் ஒரு நாடுதான் இதுவரை இல்லாமல் இருக்கின்றது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவுடன் 2019-ஆம் ஆண்டு காம்பியா (The Gambia) மியான்மருக்கு எதிராக இவ்வழக்கைத் தாக்கல் செய்தது. வழக்கைத் தொடர காம்பியாவுக்கு உரிமையில்லை என மியான்மர் வாதிட்ட போதிலும், இனப்படுகொலைத் தடுப்புச் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் அச்சாசனம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் காண்பதில் அக்கறை உண்டு எனக் கூறி நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
பொறுப்புக்கூறலைக் கோருவதற்கு ஒரு நாடு நேரடியாக இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. 1950 ஒக்டோபர் மாதம் இனப்படுகொலைத் தடுப்புச் சாசனத்தில் இணைந்து கொண்ட இலங்கை, நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு எந்தவொரு நிபந்தனையையும் விதிக்கவில்லை. எதிர்காலப் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்காக இலங்கையில் இழைக்கப்பட்ட அட்டூழியங்களின் ஆதாரங்களைத் திரட்டிப் பாதுகாப்பதில் ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் ஐந்து ஆண்டுகளைச் செலவிட்டுள்ளது. ஆயினும், கொழும்புக்கு எதிராக இதுவரை எந்தவொரு நாடும் அத்தகைய வழக்கைத் தொடரவில்லை.
இனப்படுகொலைத் தடுப்புச் சாசனம் எவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து வாதிடுவதற்குப் பதினொரு நாடுகள் இவ்வழக்கில் தலையிட்டன. உலகின் மிகப்பெரிய ஈழத் தமிழ் புலம்பெயர் சமூகங்களைக் கொண்ட பிரிட்டனும் கனடாவும் அவற்றில் அடங்கும். 2022-ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதைக் கனடாவின் பாராளுமன்றம் ஏகமனதாக அங்கீகரித்ததுடன், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கொழும்பைச் சர்வதேச நீதிமன்றங்களுக்கு முன்பாக நிறுத்துவதாக உறுதியளித்துள்ளார். இத்தீர்ப்பிற்குப் பதிலளித்த பிரிட்டன், மியான்மரின் பாதுகாப்பு ஆலோசகரை வெளியேற்றப் போவதாகவும், பாதுகாப்புச் சபையின் அவசர அமர்வைக் கூட்டப் போவதாகவும் அறிவித்துள்ளது. ரோஹிங்கியாக்களின் அழிவு என்பது ஒவ்வொரு நாட்டினதும் கவலைக்குரிய விடயம் என வாதிட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் என்பது வேறொருவரின் பிரச்சினை என இவ்விரு நாடுகளாலும் இனிக் கூற முடியாது.
இதேவேளை, இலங்கை நீண்டகாலமாகவே தனது தரப்பைத் தேர்ந்தெடுத்து விட்டது. 2024 ஜூலையில், முள்ளிவாய்க்கால் போரில் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மியான்மருக்குப் பயணம் செய்து, 2017 இராணுவ நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியவரும் தற்போது அந்நாட்டை ஆட்சி செய்பவருமான மின் ஆங் ஹ்லைங்கை (Min Aung Hlaing) சந்தித்தார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது. 2025 ஒக்டோபரில் இரு நாடுகளின் விமானப்படைகளும் யாங்கூனில் தமது முதலாவது உயர்மட்டப் பேச்சுவார்த்தையை நடத்தின; கடந்த செப்டெம்பர் மாதம் மியான்மர் விமானப்படை அதிகாரிகள் இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் வரவேற்கப்பட்டனர். அம்மாத இறுதியில் இரத்மலானையில் இரு விமானப்படைகளும் மருத்துவப் பரிமாற்ற நிகழ்வொன்றை நடத்தின. ஒக்டோபர் மாதம் ஐந்து பேர் கொண்ட மியான்மர் இராணுவத் தூதுக்குழு கொழும்பில் இலங்கை விமானப்படைத் தளபதியைச் சந்தித்தது. 2014-ஆம் ஆண்டில் பொதுபல சேனா அமைப்பிற்கும் மியான்மரின் முஸ்லிம் விரோத ‘969’ இயக்கத்தின் தலைவரான பிக்குவிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையால் எடுத்துக்காட்டப்பட்டவாறு, இரு நாடுகளிலும் ஆழமாக வேரூன்றியுள்ள இனவாத பௌத்த தேசியவாதத்துடன் இணைந்தே இவ்வுறவுகள் பயணிக்கின்றன.
இவை எதுவும் நீதி கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது என்பதை அர்த்தப்படுத்தவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு கட்டுப்படுத்தக்கூடியது என்றாலும், அதனை நடைமுறைப்படுத்துவது இறுதியில் நாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. மியான்மர் இத்தீர்ப்பை அநியாயமானது என நிராகரித்துள்ளது; நீதிமன்றம் ‘அரசியல்மயமாக்கப்படுவதற்கு’ எதிராக வாஷிங்டன் எச்சரித்துள்ளது; ‘அதிகார வரம்பை மீறிய செயல்’ என பெய்ஜிங் குற்றம் சாட்டியுள்ளது — கொழும்பு மகிழ்ச்சியுடன் கடன் வாங்கிக் கொள்ளக்கூடிய ஆட்சேபனைகள் இவை. நீதிமன்றத்தின் கண்டறிதலை அங்கீகரிக்காமல், ரோஹிங்கியா அகதிகள் நாடு திரும்புவதற்கான தனது ஆதரவை மட்டும் மீண்டும் வலியுறுத்தி, தீர்ப்பை ‘கவனத்தில் கொள்வதாக’ மட்டுமே புதுடெல்லியால் கூற முடிந்துள்ளது.
ஆயினும், இத்தீர்ப்பு மாற்ற முடியாத ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொடூரத்தை ‘துயரச் சம்பவம்’ என அழைப்பதற்கும், அதனை ஒரு ‘குற்றமாகப்’ பதிவு செய்வதற்கும் இடையிலான வேறுபாட்டை இது குறித்து நிற்கிறது. 2009-இல் துப்பாக்கிகள் மௌனிப்பதற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் கோரி வருவதும் இதனைத்தான்.
இனப்படுகொலைத் தடுப்புச் சாசனத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு இப்போது இலங்கையைச் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். கனடாவிற்கும் பிரிட்டனுக்கும் அதற்கான சட்டபூர்வ தகுதியும், ஆதாரங்களும், அதனைக் கோரும் வாக்காளர்களும் உள்ளனர். அதற்கு ஒரு நாடு முன்வந்தாலே போதும்.