UNDP இலங்கை (ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்
குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து, குறிப்பாக புரதச்சத்து (Protein) நிறைந்த உணவுகள் இல்லாமல் வளரும்போது, அதன் பாதிப்புகள் நீண்டகால மற்றும் மாற்றியமைக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, கல்வித் திறன் மற்றும் எதிர்கால உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது. காலப்போக்கில், இது ஒரு நாட்டின் மனித மூலதனத்தை (Human capital) சிதைத்து, ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியைப் பல தசாப்தங்களாகப் பின்னோக்கித் தள்ளிவிடும்.
இலங்கை போன்ற நாடுகளில், இறைச்சி மற்றும் மீன் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஏழை எளிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு விலை அதிகமாக உள்ளன. இத்தகைய பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு முட்டைகள் ஒரு மலிவான மற்றும் புரதச்சத்து நிறைந்த மாற்றாக அமைகின்றன. இருப்பினும், சில பகுதிகளில் அதுகூட ஆடம்பரப் பொருளாகவே பார்க்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தின் ‘ஹோப்’ (HOPE) தேயிலைத் தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த பெண் தொழிலாளியான எம். மேகலா என்பவரின் அனுபவம் இந்த யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது.
“தோட்டத்தில் நான் தொடர்ந்து வேலை செய்தபோதிலும், நீண்ட காலமாக எங்களது வருமானம் உயரவில்லை. எங்களால் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து முட்டைகளை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அருகில் கடைகளும் இல்லை, சம்பள நாளில் மட்டும்தான் முட்டையை எங்களால் வாங்க முடிந்தது” என்கிறார் மேகலா.

தோட்டப்புறப் பெண்களும் நெருக்கடியின் தாக்கமும்:
மேகலாவின் இந்த நிலைமை, இலங்கையின் மலையகத் தோட்டத் துறையில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது. வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட இந்த மக்கள் சமூகம், கடுமையான வறுமை மற்றும் ஆழமான பாலின சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் தேடி ஆண்கள் வெளியேறுவது அதிகரித்ததால், குடும்பப் பராமரிப்பு மற்றும் வாழ்வாதாரச் சுமைகள் அனைத்தும் பெண்களின் தோள்களிலேயே விழுந்தன.
இதனைக் கருத்திற்கொண்டு, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், UNDP இலங்கையின் ‘காலநிலை வாக்குறுதி’ (Climate Promise) முன்முயற்சியின் கீழ், நுவரெலியா தோட்டப்புறச் சமூகங்களில் கோழி வளர்ப்பு மூலமான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
முக்கியமாக, தோட்டப் புறப் பெண்கள் ஏற்கனவே கடினமான உழைப்பில் ஈடுபடுவதால், அவர்களுக்கு இது கூடுதல் சுமையாக அமையாதவாறு, மிகக் குறைந்த பராமரிப்பு மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
ஒரு எளிய மாற்றம் தந்த மாபெரும் திருப்பம்:
UNDP அமைப்பால் மேகலாவிற்கு கோழிகள், கோழிக்கூடு, தீவனம் மற்றும் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், 100 தோட்டப் பெண் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயல்பட்டதால், ஒருவருக்கொருவர் அறிவைப் பகிர்ந்து கூட்டுப் பொறுப்புடன் இந்த உற்பத்தியை மேற்கொண்டனர்.
“இப்போது எங்களால் எங்கள் பிள்ளைகளுக்கு முட்டையுடன் கூடிய நல்ல, சத்தான உணவை வழங்க முடிகிறது. ஒரு காலத்தில் சம்பள நாள் ஆடம்பரமாக இருந்த முட்டை, இன்று எங்களது அன்றாட உணவாக மாறியுள்ளது” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மேகலா.
வீட்டைத் தாண்டி சமூகத்திற்குப் பயன்படும் முட்டைகள்:
இந்தத் திட்டத்தின் தாக்கம் தனிப்பட்ட குடும்பங்களோடு நின்றுவிடவில்லை. இந்தக் குழுக்களினால் சேகரிக்கப்படும் முட்டைகள், அந்தந்தத் தோட்டப் பகுதிகளில் உள்ள முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு, ஒட்டுமொத்தக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த உதவுகின்றன. தேவையைத் தாண்டி எஞ்சியிருக்கும் முட்டைகள் உள்ளூர் கடைகளில் விற்கப்பட்டு, குடும்பங்களுக்கு கூடுதல் வருமானத்தையும் ஈட்டித் தருகின்றன.


ஒரே ஒரு எளிய தலையீடு மூலம்: மேம்பட்ட ஊட்டச்சத்து, கூடுதல் வருமானம், வலுவான சமூகப் பிணைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய பல நன்மைகள் சாத்தியமாகியுள்ளன.
ஜப்பான் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ‘மனித பாதுகாப்பு’ (Human security) என்பது மக்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்கள் கண்ணியத்துடனும் மீளெழுத்துடனும் வாழ்வதற்கு வழிவகுப்பதாகும்.
வளர்ச்சி என்பது பெரும்பாலும் பயிரிடப்பட்ட ஹெக்டேயர்கள் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட மெகாவாட்களின் எண்ணிக்கையிலேயே அளவிடப்படுகிறது. ஆனால், இலங்கையின் மலையகத் தேயிலைத் தோட்டங்களில், ஒரு நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி, ஒரு சிறிய ‘முட்டைக்கு’ உண்டு என்பதை இந்தத் திட்டம் நிரூபித்துள்ளது
