காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதைத் தவிர, எஞ்சியவர்களின் நிலைமை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளனர்.
சீயட்ல் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கிராஸ் நுனெஸ் (Grace Nuñez) கூறுகையில், முதல் உதவிப் படையினர் இரு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முயன்றும் அது பலனளிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்களில் நால்வர் அப்பாந்தியத்தின் முதன்மை அதிர்ச்சிப் பராமரிப்பு மையமான (Trauma Center) வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹார்பர்வியூ மருத்துவ மையத்திற்கு (Harborview Medical Center) கொண்டு செல்லப்பட்டதாக அதன் செய்தித் தொடர்பாளர் சூசன் கிரெக் (Susan Gregg) தெரிவித்தார்.
அனைவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததாகவும், கைகள், கால்கள், அடிவயிறு போன்ற இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கிரெக் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். “ஏனைய நோயாளிகள் (ஒரு சிறுவன், 23 வயது ஆண் மற்றும் 39 வயது பெண்) திருப்திகரமான நிலையில் உள்ளனர்,” என்று அவர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.
சிறு காயங்களுக்கு உள்ளான 40 வயதுடைய பெண் நோயாளி ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகத் தீயணைப்புத் துறையின் நுனெஸ் தெரிவித்தார்.
துப்பறியும் அதிகாரிகளும் பொலிஸாரும் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய முயன்று வருவதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு சீயட்ல் பொலிஸ் திணைக்களம் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
‘பைட் ஆஃப் சீயட்ல்’ (Bite of Seattle) உணவுத் திருவிழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று அதன் வருடாந்திர நிகழ்வுகள் நிறைவடையும் நிலையிலிருந்தன. இத்துப்பாக்கிச் சூட்டுடன் இந்த நிகழ்வுக்கு நேரடித் தொடர்பு உள்ளதா என்பது உடனடியாகத் தெளிவாக்கப்படவில்லை. இது தொடர்பில் கேட்கப்பட்ட கருத்துக்கோரிக்கைக்கு உடனடியாகப் பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
ஈஸ்டன் வகோனபோ (Esten Wakonabo) தனது காதலியுடன் புகைப்படக் கூடத்திற்கு (Photo booth) வரிசையில் காத்துக்கொண்டிருந்தபோது, அவர்களைச் சுற்றியிருந்தவர்கள் ஓடத் தொடங்கியதாக ‘சீயட்ல் கிங் டி.வி’ (KING TV) ஊடகத்திற்குத் தெரிவித்தார்.
“அது ஒரு பெரும் கூட்ட நெரிசலாக (Stampede) மாறியது” என்று அவர் கூறினார்.
சற்று நேரத்திற்குப் பிறகு, தரையில் மனிதர்கள் விழுந்து கிடப்பதையும், சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருப்பதையும் கண்டதாக வகோனபோ கூறினார்.
“எங்கு பார்த்தாலும் உடல்கள் கிடந்தன. காயமடைந்ததாகத் தோன்றிய குறைந்தது எட்டு பேரை நான் எண்ணினேன்” என்று அவர் விவரித்தார்.
‘பைட் ஆஃப் சீயட்ல்’ அரங்கை இயக்க உதவிக்கொண்டிருந்த போல் ஸ்கின்னர் (Paul Skinner) என்பவர், பெரும் குழப்பம் வெடித்ததாகக் கூறினார்.
“முதலில் பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. ஆனால் அவ்வளவு பெரிய கூட்ட நெரிசலில் அப்படி நடப்பது சாத்தியமில்லை,” என்று அவர் ‘கிங் டி.வி’க்குத் தெரிவித்தார். “பின்னர், மக்கள் கூட்டமாக வேகமாக நகரத் தொடங்கியபோதுதான் ஏதோ தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.”
“நாங்கள் அனைவரும் கீழே குனிந்து புகலிடம் தேடினோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
1962 ஆம் ஆண்டு சீயட்ல் உலகக் கண்காட்சிக்காக (Seattle World’s Fair) அமைக்கப்பட்ட கொலிசியம் (Coliseum), சீயட்ல் சென்டர் மோனோரயில் (Seattle Center Monorail) மற்றும் ஸ்பேஸ் நீடில் (Space Needle) உள்ளிட்ட பிரதான கட்டமைப்புகளை உள்ளடக்கியே இந்த சீயட்ல் சென்டர் வளாகம் உருவாக்கப்பட்டது.
மூன்று நாட்கள் இலவசமாக நடைபெறும் இந்த வருடாந்திர ‘பைட் ஆஃப் சீயட்ல்’ உணவுத் திருவிழா, 3,50,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கவர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.