ரஷ்ய கூட்டமைப்பின் தேசிய கட்டுமான சங்கத்தின் (NOSTROY) உயர்மட்ட வணிகக் குழுவொன்று, உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
துணைத் தலைவர் அன்டன் மொரோஸ் (Anton Moroz) தலைமையிலான இக்குழுவில், ரஷ்யாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த 24 மூத்த பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இடம்பெற்றுள்ளதாக .வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது
இக்குழுவினர் பல அமைச்சுகளின் அதிகாரிகள், நகர்ப்புற வளர்ச்சி அதிகாரம் (UDA) மற்றும் முதலீட்டுச் சபை (BOI) ஆகியவற்றின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
“உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த விவாதங்கள் அமைந்திருந்தன,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“தகுதியான இலங்கை கட்டுமானத் துறை தொழில்வல்லுநர்களுக்கு ரஷ்ய கூட்டமைப்பில் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்காக இந்தத் தூதுக்குழு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தையும் (SLBFE) சந்தித்தது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நோஸ்ட்ரோய்’ (NOSTROY) என்பது ரஷ்ய கூட்டமைப்பின் கட்டுமானத் துறையில் உள்ள மிகப்பெரிய அமைப்பாகும். இது ரஷ்யாவிலும் சர்வதேச அளவிலும் இயங்கும் கட்டுமான நிறுவனங்களில் பாதியளவிற்கும் அதிகமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
