BBC

ஜப்பானின் தென்மேற்கு நகரமான யட்சுஷிரோவில் (Yatsushiro) உள்ள ‘செண்டான் ஷோகுடோ’ (Sendan Shokudo) உணவகத்தில் அன்றைய நாளுக்கான வியாபாரம் முடியவிருந்த நிலையில், திடீரென கட்டடம் முழுவதுமாகச் சாய்ந்து ஆடத் தொடங்கியது. சமையலறை அலமாரிகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் சரிந்து விழுந்தன; கிண்ணங்களும் கண்ணாடிகளும் நொறுங்கின.
உணவகத்தின் இணை உரிமையாளரான 75 வயதான ஹிரோகோ ஒகாடா (Hiroko Ogata) அப்போதுதான் உள்ளே நுழைந்திருந்தார்.
“நான் மிகவும் ஆச்சரியமும் பயமும் அடைந்தேன்,” என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார். “நான் உடனடியாக ஒரு மேஜைக்கு அடியில் சென்றேன், ஆனால் அந்த மேஜையும் என்னுடன் சேர்ந்து வலது, இடது, வலது, இடது என வேகமாக நகர்ந்தது.”
ஒகாடா மத்திய குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் உள்ள யட்சுஷிரோவில் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தவர்.
இந்தப் பகுதி ஒரு தீவிர நில அதிர்வுப் பிளவு மண்டலத்தில் (Active tectonic fault system) அமைந்துள்ளதால், நிலநடுக்கங்களுக்குப் புதியதல்ல. 2016 ஆம் ஆண்டில், இங்கு ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் 277 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,800 பேர் காயமடைந்தனர். ஆனாலும் ஒகாடா “தனது வாழ்க்கையில் இவ்வளவு பெரிய அதிர்வை அனுபவித்ததே இல்லை” என்கிறார்.
“10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடைசி நிலநடுக்கம் இதனுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை,” என்று அவர் கூறினார். “நான் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன்.”
செவ்வாய்க்கிழமை இரவு குமாமோட்டோவைத் தாக்கிய 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மூவர் குமாமோட்டோ நகரத்தில் உள்ள ‘ஏயோன்’ (Aeon) வணிக வளாகத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு இன்னும் பல டஜன் கணக்கான மக்கள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, ஆனால் அவசர சேவைகள் “காலத்திற்கு எதிரான பந்தயத்தில்” ஈடுபட்டுள்ளதாகப் பிரதமர் சனாயே தகாய்ச்சி (Sanae Takaichi) எச்சரித்துள்ளார்.
‘அடுத்தடுத்து வந்த பெரிய அதிர்வுகள்’
ஏயோன் வணிக வளாகத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில், நிலநடுக்கம் தாக்கியபோது யுய் (Yui – பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது கேக் கடையில் உள்ள பின்புற அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்.
“எது நிலநடுக்கத்தின் சத்தம், எது வெடிப்புச் சத்தம் என்று என்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“அடுத்தடுத்து பெரிய அதிர்வுகள் வந்துகொண்டிருந்தபோது, நான் அமர்ந்திருந்த நாற்காலியைப் பிடித்துக் கொள்வதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை,” என்று இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவராக அவர் சேர்த்துக் கூறினார். “என்ன உணர்வது என்றே எனக்குத் தெரியவில்லை; அந்தச் சூழ்நிலையில் பயப்படக்கூட முடியவில்லை. இப்போது கூட என்ன உணர்வது என்று எனக்குத் தெரியவில்லை, அதை எப்படி விளக்குவது என்றும் தெரியவில்லை.”
அதிகாரிகளும் அவசரகால மீட்புக் குழுவினரும் விரைவாகச் செயல்பட்டனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே, மீட்புப் பணிகளுக்கு உதவ பிரதமர் தகாய்ச்சி 4,600 பணியாளர்களைப் களத்தில் இறக்கினார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும் கண்காணிக்கவும் குழுக்கள் “இரவு முழுவதும் அயராது உழைக்கும்” என்று கூறினார்.
இருப்பினும், குமாமோட்டோ நகரம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் தடையை எதிர்நோக்கியுள்ளனர், மேலும் குறைந்தது 45 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன.
நகரத்தின் மையப்பகுதியில் உள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குமாமோட்டோ கோட்டையின் (Kumamoto Castle) வெளிச் சுவர்கள் தூசிப் படலத்துடன் இடிந்து விழுந்தன. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யட்சுஷிரோ ஆலயத்தின் (Yatshushiro Shrine) வழிபாட்டுக் கூடம் முற்றிலும் சரிந்து விழுந்தது.
உள்ளூர்வாசியான மைக்கேல் போசன் (Michal Posan) கூறுகையில், “கடைகளில் தண்ணீரோ உணவோ எதுவுமே எஞ்சியிருக்கவில்லை” என்று தெரிவித்தார்.
25 வயதான போசன், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குமாமோட்டோவில் வசித்து வருகிறார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர் வீட்டில் இருந்தார்.
“எனது தொலைக்காட்சி என் மீது விழுந்தது, எனது கண்ணாடி நொறுங்கியது, என்னைச் சுற்றியுள்ள வீதிகள் சேதமடைந்தன,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்—மேலும் “தொடர்ச்சியான பின்னதிர்வுகளுக்குப்” (Aftershocks) மத்தியில் தான் வெளியேற்றுவதற்கான அவசரகாலப் பைகளைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
மற்றொரு உள்ளூர்வாசி கூறுகையில், ஆரம்ப நிலநடுக்கத்திற்குப் பிறகு பல மணிநேரம் கழித்தும் பின்னதிர்வுகள் நகரை உலுக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
“மற்றொரு நிலநடுக்கம் வருமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்,” என்று அவர் கூறினார். “2016 நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.”
வல்லுநர்களும் கவலையடைந்துள்ளனர். ஜப்பானின் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஷின்ஜி கியோமோட்டோ, சில நாட்கள் இடைவெளியில் தாக்கிய 2016 ஆம் ஆண்டின் கொடிய நிலநடுக்கத் தொடரைக் குறிப்பிட்டு, மேலும் நிலநடுக்கங்கள் வரக்கூடும் என்பதால் பொதுமக்கள் “விழிப்புடன் இருக்குமாறு” கேட்டுக்கொண்டுள்ளார்.
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் முயற்சிகள்
இதற்கிடையில், ஒகாடா மற்றும் யுய் போன்ற உள்ளூர்வாசிகள், புவியியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அதிர்வலைகள் தொடர்ந்தபோதிலும், இடிபாடுகளை அகற்றி மீண்டும் ஏதேனும் ஒரு வகையில் இயல்பு நிலையை மீட்டெடுக்க முயன்று வருகின்றனர்.
“எனது இடம் முழுவதுமே குழப்பமாக இருக்கிறது, எங்கு நிற்பது என்றே தெரியவில்லை – ஆனால் கூடிய விரைவில் எங்கள் உணவகத்தை மீண்டும் தொடங்கி வாழ்வாதாரத்தைச் சம்பாதிக்க வேண்டும், அதனால் இன்று நான் இடத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்,” என்று ஒகாடா புதன்கிழமை கூறினார்.
“ஆனால் நான் சிறிது நேரம் வேலை செய்ய முயலும் போது, ஒரு பின்னதிர்வு ஏற்படுகிறது, நான் அதை நிறுத்த வேண்டியிருக்கிறது… பின்னர் கொஞ்சம் வேலை செய்கிறேன், மீண்டும் ஒரு பின்னதிர்வு வருகிறது… அதனால் வேலை மிகவும் மெதுவாக நடக்கிறத். இந்த அளவுக்கு தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்பட்டால் அது மிகவும் மன அழுத்தத்தைத் தரும்.”
கேக் கடையின் உரிமையாளரான யுய், சேதத்தின் அளவை மதிப்பிட்டு வருவதால் அவரது கடை மூடப்பட்டே உள்ளது.
“அவன் (Oven) போன்ற இயந்திரங்கள் வேலை செய்கின்றனவா என்பதை நான் இன்னும் சரிபார்க்கவில்லை,” என்று அவர் கூறினார். “அவற்றைச் சரிபார்த்த பிறகுதான், நான் மீண்டும் வியாபாரத்தைத் தொடங்க முடியுமா இல்லையா என்ற யோசனை எனக்கு வரும்.”
