Faraz Shauketaly
உற்பத்தி, தொழினுட்பம் மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கான இந்தியாவின் முன்னணி மையங்களில் ஒன்றாகச் சென்னை தனது இடத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. புதிய தொழிற்துறை திட்டங்கள், நாட்டின் மிகவும் வணிகத்திற்கு ஏற்ற மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாட்டின் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

வாகன உற்பத்தித் துறை (Automobile industry) மாநிலத்தின் பொருளாதாரத்திற்குத் தொடர்ந்து தூணாக இருந்து வருகிறது. அதேவேளையில், சமீபத்திய ஆண்டுகளில் மின்னணு உற்பத்தி (Electronics manufacturing), செமிகண்டக்டர் சார்ந்த தொழில்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) மற்றும் மேம்பட்ட பொறியியல் ஆகியவற்றிலும் விரைவான வளர்ச்சி காணப்படுகிறது. உலகளாவிய நிறுவனங்கள் சென்னை பெருநகரப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்துறை வழித்தடங்களில் தங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன.
மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, திறமையான தொழிலாளர்கள், ஒப்பீட்டளவில் நிலையான தொழிற்துறை உறவுகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுடனான சுறுசுறுப்பான அணுகுமுறை ஆகியவையே இந்தத் தொடர் முதலீடுகளுக்குக் காரணம் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னைத் துறைமுகமும், அருகிலுள்ள காமராஜர் துறைமுகமும் ஏற்றுமதிக்குத் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வரும் அதே வேளையில், தென்னிந்தியா முழுவதிலும் விநியோகச் சங்கிலி செயல்திறனை (Supply-chain efficiency) மேம்படுத்த புதிய தளவாடத் திட்டங்கள் (Logistics projects) இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை வணிகங்களைப் பொறுத்தமட்டில், சென்னையின் இந்தத் தொடர் வளர்ச்சி வாய்ப்புகளையும் சவால்களையும் ஒருசேர வழங்குகிறது. நகரத்தின் விரிவடைந்து வரும் பொருளாதாரம் வர்த்தகம், தளவாடங்கள், தொழில்முறை சேவைகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றிற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது. அதே வேளையில், பாக் ஜலசந்திக்கு அப் பாலால் வலுவடையும் தொழிற்துறை திறன், வேறு இடங்களுக்குச் சென்றிருக்கக்கூடிய முதலீடுகளுக்குப் பிராந்திய அளவிலான போட்டியையும் தவிர்க்க முடியாமல் அதிகரிக்கிறது.
பல இலங்கை நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணி வரும் நிலையில், பெரு எண்ணிக்கையிலான இலங்கை நோயாளிகள், மாணவர்கள் மற்றும் வர்த்தகப் பயணிகள் சென்னையைத் தங்களின் விருப்பத்திற்குரிய இடமாகக் கருதுவது தொடர்கிறது.
உற்பத்தித் துறையைத் தொழினுட்பம் மற்றும் ஆராய்ச்சியோடு இணைக்கும் தமிழ்நாட்டின் நீண்டகால வியூகம், வரவிருக்கும் தசாப்தத்தில் அதன் போட்டித்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கொழும்புக்கு இதிலுள்ள பாடம் மிகவும் தெளிவானதாக இருக்கலாம்: புவியியல் அமைவிடம் மட்டுமே இனி முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்காது. கொள்கைகளின் நிலைத்தன்மை, உள்கட்டமைப்பு, திறமையான தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவையே மூலதனம் இறுதியில் எங்குச் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.