மிதக்கும் ஆயுதக் கிடங்கு வசதிகள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தில் இருந்து அவன்கார்ட் (Avant Garde) நிறுவனம் பல வருடங்களாக மாதம் ஒன்றுக்கு சுமார் 3,20,000 அமெரிக்க டாலர்களைப் பெற்று வந்துள்ளதாகப் பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (கோப் – COPE) உபகுழு விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வருமானம் அரசுக்குச் சேர்ந்திருக்க வேண்டியது என கோப் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரக்னா அரக்ஷக லங்கா லிமிடெட் (RALL) நிறுவனம், அதன் செயல்பாடுகள் மற்றும் அவன்கார்ட் நிறுவனத்துடனான நீண்டகாலக் கூட்டுப்பங்கு ஒப்பந்தம் குறித்த விவரங்களை வழங்குவதற்காக கோப் உபகுழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட் போது இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
குழுவிடம் உரையாற்றிய ரக்னா அரக்ஷக லங்கா லிமிடெட் தலைவரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ, தற்போதைய நிர்வாகம் இந்த ஏற்பாட்டைத் தொடங்குவதற்குப் பொறுப்பல்ல என்றும், முந்தைய அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்ட கூட்டுப்பங்கு ஒப்பந்தமே இன்னமும் அமலில் உள்ளது என்றும் விளக்கமளித்தார்.
இலங்கை கடல் வழியைக் கடந்து செல்லும் கப்பல்களில் கொண்டு வரப்படும் ஆயுதங்கள், சர்வதேச விதிமுறைகள் காரணமாகக் கரைக்குக் கொண்டுவரப்பட முடியாததால், காலி துறைமுகத்தில் இறக்கப்பட்டு மிதக்கும் ஆயுதக் கிடங்குகளில் சேமிக்கப்படுவதாக அவர் விளக்கினார். பெர்னாண்டோவின் கூற்றுப்படி, மூன்று ஆயுதங்களைச் சேமித்து வைக்க சுமார் 1,800 அமெரிக்க டாலர்களும், அந்த ஆயுதங்களை மீளப் பெறும்போது மேலும் 1,800 அமெரிக்க டாலர்களும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
மிதக்கும் ஆயுதக் கிடங்கு செயல்பாடு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக மாறியுள்ளதாகப் பெர்னாண்டோ குழுவிடம் தெரிவித்தார். இருப்பினும், இந்தக் கூட்டுப்பங்கு ஏற்பாட்டின் கீழ், இலாபத்தில் 80 சதவீதம் தனியார் நிறுவனத்திற்கு (அவன்கார்ட்) ஒதுக்கப்பட்டது, மீதமுள்ள 20 சதவீதம் இலங்கை கடற்படைக்கும் ரக்னா லங்காவிற்கும் இடையே பிரித்துக்கொள்ளப்பட்டது.
இந்த செயல்பாட்டின் இலாபத்தன்மை குறித்து கோப் உபகுழுத் தலைவர் அசித நிரோஷன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பெர்னாண்டோ, இது தற்போது மாதம் ஒன்றுக்குச் சுமார் 400,000 அமெரிக்க டாலர்கள் வருவாயை ஈட்டுகிறது என்றும், அதில் 80 சதவீதம் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்திற்கே செல்கிறது என்றும் கூறினார்.
அவன்கார்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்குச் சட்டப்பூர்வ தடைகள் உள்ளதா என்று கேட்டதற்கு, ஒப்பந்தம் 2027 வரை செல்லுபடியாகும் என்பதால் சட்டக் தடைகள் நீடிப்பதாகப் பெர்னாண்டோ பதிலளித்தார்.
இந்த ஏற்பாட்டிற்கு யார் அனுமதி அளித்தார்கள் என்று கோப் குழு உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரகீத் மதுரங்க கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ரக்னா அரக்ஷக லங்கா லிமிடெட் நிறுவனத்தின் சட்டப் பிரிவுத் தலைவர் ஹிமாஷா முனசிங்க, 2009 இல் தொடங்கப்பட்ட இந்த ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார். மேலும், இந்த விவகாரம் வெறும் நிர்வாகக் குழு மட்டத்திலான முடிவு அல்ல என்றும், அது பாதுகாப்பு அமைச்சச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் முனசிங்க சேர்த்துக் கூறினார்.
ரக்னா அரக்ஷக லங்கா லிமிடெட்டின் பாதுகாப்பில் உள்ள ஆயுதங்கள் குறித்தும் குழு கவலை தெரிவித்தது. மற்றொரு அதிகாரியான எச்.எம். பெர்னாண்டோ உறுப்பினர்களிடம் தெரிவிக்கையில், தற்போதைய பதிவுகளின்படி நிறுவனத்திற்குச் சொந்தமாக 219 ஆயுதங்கள் கணக்கில் உள்ளன என்றார்.
அந்த ஆயுதங்களின் நிலை குறித்து வினவியபோது, 139 துப்பாக்கிகள் வெளிநாட்டு ஆயுதக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டு இன்னும் இலங்கைக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தினார். மேலும், 13 ஆயுதங்கள் எங்கு உள்ளன என்பது தற்போது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, காணாமல் போன ஆயுதங்கள் மிதக்கும் ஆயுதக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ந்து தொடர்புகொண்டு அவற்றைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறப்பட்டது.
வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான பொறுப்பு குறித்து வினவியதற்கு, அதில் தொடர்புடையவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தவிர்ப்பதாக எச்.எம். பெர்னாண்டோ தெரிவித்தார். ஓமானில் 7 ஆயுதங்களும், தென்னாப்பிரிக்காவில் 47, தான்சானியாவில் 10, செங்கடல் பகுதியில் 51, மொரிஷியஸில் 3, போலந்தில் 3 மற்றும் பிரான்சில் 4 ஆயுதங்களும் உள்ளதாக அவர் குழுவிடம் கூறினார்.
ஆயுதங்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு யார் இறுதிப் பொறுப்பேற்பார்கள் என்று கோப் உறுப்பினர்கள் வினவியபோது, இந்தப் பணிக்கு எந்தவொரு தரப்பும் இதுவரை பொறுப்பேற்கச் சம்மதிக்கவில்லை என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
அவன்கார்ட் மற்றும் ரக்னா அரக்ஷக லங்கா லிமிடெட் இடையிலான நிதிப் பொறுப்புகள் குறித்தும் குழு பரிசீலித்தது. ஒப்பந்தத்தின் கீழ் அவன்கார்ட் நிறுவனம் ரக்னா அரக்ஷக லங்காவிற்கு 5 சதவீதத்தை செலுத்த வேண்டும், ஆனால் இந்தக் கொடுப்பனவுகள் அடிக்கடி இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை தாமதமாகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடுதல் விவரங்களை வழங்கிய முதன்மை கடல்சார் பாதுகாப்பு அதிகாரியான ஓய்வுபெற்ற கொமடோர் டி.எல்.எஸ்.எம். டயஸ், அவன்கார்ட் நிறுவனம் தற்போது ரக்னா லங்காவிற்குச் சுமார் 3.5 மில்லியன் ரூபாயை நிலுவையாக வைத்திருக்க வேண்டும் என்று குழுவிடம் தெரிவித்தார்.
