சாத்தியக்கூறு ஆய்வுகள், வடிவமைப்புப் பணிகள் நிறைவு
காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தின் முன்மொழியப்பட்ட புனரமைப்புத் திட்டம் தொடர்பில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளின் இறுதிப் கட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன், சாத்தியக்கூறு ஆய்வுகள், வடிவமைப்பு மற்றும் ஏனைய முக்கிய தொழில்நுட்பத் தீர்மானங்கள் நிறைவடைந்துள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இத்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார்.
“இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது பேச்சுவார்த்தை நிலையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.
இத்திட்டத்தின் பௌதிகக் கட்டுமானப் பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை என்பதை கொடித்துவக்கு உறுதிப்படுத்தினார்.
“நாங்கள் நிபந்தனைகள் மற்றும் பேச்சுவார்த்தை விவரங்களைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி சில கருத்துருக்களைப் பெற்றோம். அக்கருத்துருக்களுக்கு அமைவாகச் செயற்பட்டு, அவற்றை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் சமர்ப்பித்துள்ளோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகமுன், நிபந்தனைகளை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் இடம்பெற வேண்டும்; அவை தற்போது இடம்பெற்று வருகின்றன.”
இருப்பினும், திட்டத்திற்குத் தேவையான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. “சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் வடிவமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளதுடன், பல தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மானியத்தைப் பெற்று, பணிகளைத் தொடங்குவது மட்டுமே” என்று பிரதி அமைச்சர் கூறினார்.
இத்திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட 60 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய மானியம் குறித்துப் பேசிய கொடித்துவக்கு, செயற்படுத்தல் கட்டமைப்பு குறித்த கலந்துரையாடல்களும் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும், அந்த நிதி ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
“அந்த 60 மில்லியன் டொலர் மானியம் நமக்குக் கிடைக்கக்கூடியதாகவே உள்ளது. இந்த மானியத்தை நாம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம், இத்திட்டத்தின் உரிமை யாருக்கு இருக்கும், மற்றும் எவ்வாறான கூட்டாண்மையில் நாம் ஈடுபடப் போகிறோம் என்பது குறித்தே தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன,” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.