உலகச் சந்தையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையேற்றத்தின் சுமையிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்வைத்த புதிய எரிபொருள் மானிய திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) நிராகரிக்கவில்லை என எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்களின் போது இத்தாக்கத்தை எதிர்கொள்வதற்கான பல்வேறு வழிமுறைகள் ஆராயப்பட்டதாகவும், அதில் மானியம் வழங்குவதே தற்போதைய சூழலில் நடைமுறைச் சாத்தியமான தீர்வாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதியின் எரிபொருள் மானிய முன்மொழிவை சர்வதேச நாணய நிதியம் நிராகரிக்கவில்லை,” எனக் குறிப்பிட்ட செயலாளர், இத்திட்டம் தொடர்ந்து பரிசீலனையில் உள்ள போதிலும், வழங்கப்பட வேண்டிய மானியத் தொகை மற்றும் அது நடைமுறைக்கு வரும் திகதி ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என மேலும் கூறினார்.
அக்டோபர் 1 முதல் அமல்படுத்தத் திட்டம்
தற்போதைய விலைக் சூத்திரத்தின் கீழ் உள்நாட்டு எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், வரும் அக்டோபர் 1 முதல் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மானியம் வழங்கப்படும் என ஜனாதிபதி திசாநாயக்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் இலங்கை தீவிர நிபந்தனைகளை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்த புதிய மானிய அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.