அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தானது என சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தின் அரசியலமைப்பு தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு தீர்மான மனுக்களின் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்மொழியப்பட்ட இந்த சட்டமூலமானது மக்களின் சுதந்திரத்தை உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்துகின்றது எனவும்,தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தானது எனவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தலைமைநீதிபதி பிரீதி பத்மன் சுரசேன,நீதிபதி அச்சலா வெங்கலபுலி,சம்பத் அபயக்கோன் ஆகியோர் முன்னிலையில் இந்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 25 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதிகள் இதனை தெரிவித்தனர்.
இரண்டு ஊடகவியலாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி விடுதலையான நபர்கள் உட்பட பல மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இந்த சட்டமூலமானது சந்தேகநபர்களை கைதுசெய்யவும் சோதனையிடவும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் அதிகாரங்களை கணிசமான அளவிற்கு விரிவுபடுத்துகின்றது இது பயங்கரவாத தடைச்சட்;டத்தினை விட ஆபத்தானது என தெரிவித்தார்.
(சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா 22 மாதங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது)
தற்போதைய சட்டத்தின் கீழ் பொலிஸ் உபபரிசோதகர் ஒருவர் தரத்திற்கு மேற்பட்டவராலேயே ஒருவரை கைதுசெய்ய முடியும் ஆனால் புதிய சட்டமூலம் எந்த பொலிஸ் அதிகாரிக்கும் இராணுவத்தினருக்கும் கடலோர காவல்படையினருக்கும் கைதுசெய்வதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது,மேலும் சந்தேகநபர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாதபோது அவர்களை விடுதலை செய்வதற்கான நீதவான்களின் அதிகாரத்தை இந்த சட்டமூலம் கட்டுப்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.