இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மகிஷினி கொலன்னே மீண்டும் உறுதிவழங்கியுள்ளார்.
பிராந்திய சமுத்திர ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையை பயன்படுத்துவதற்கு அனுமதியோம் என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு உறுதியளித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்தியாவும் இலங்கையும் கடல்களை மாத்திரம் பகிர்ந்துகொள்ளவில்லை பாதுகாப்பையும் பகிர்ந்துகொள்கின்றன ,எங்கள் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு வாக்குறுதியளித்தபடி இலங்கையை இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைளுக்கு பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
இந்த அர்ப்பணிப்பு என்பது இரண்டு நாடுகளுக்கும் இடையில் விஞ்ஞானரீதியான ஒத்துழைப்பிற்கான வலுவான அடித்தளத்தை வழங்குகின்றது,குறிப்பாக சமுத்திர ஆராய்ச்சி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை போன்றவற்;றில்
சமுத்திர முன்கணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலமாக இந்தியா இலங்கையின் பேரிடர் தயார் நிலை மற்றும் அவசரகால பதிலளிப்பு திறன்களுக்கான பயிற்சியை வழங்கியுள்ளது.
கடந்த வருட டித்வா புயலின் போது இலங்கை துறைமுகத்தில் தரித்து நின்ற இந்திய கப்பல்கள் உடனடியாக நிவாரண விநியோகங்களை இறக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தன.இந்த இயற்கை பேரிடரின்போது இலங்கைக்கு முதலிலும் அதிக அளவிலும் உதவி வழங்கிய நாடாக இந்தியா விளங்கியது. என தூதுவர் தெரிவித்துள்ளார்.
(ரி)