மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பான தனது கருத்தினை அமைச்சர் சந்திரசேகரன் மீள பெறவேண்டும்-கிழக்கு மாகாண சிவில் செயற்பாட்டாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026 நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகரன்  நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

குறித்த போராட்டத்தை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தோற்றுப்போன, கேடுகெட்ட, சுத்துமாத்து அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாகவும், அதனை அரசியல் நோக்கங்களுடன் தொடர்புபடுத்தியும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருப்பது, போராட்டத்தை ஏற்பாடு செய்த சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பையும், அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினாலோ அல்லது அரசியல்வாதிகளினாலோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் 14 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து திட்டமிட்டு, ஏற்பாடு செய்து முன்னெடுத்த மக்கள் போராட்டமாகும்.

இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும், கால்நடை வளர்ப்பாளர் அமைப்புகளுக்கும், மீனவர் சங்க அமைப்புக்களும், மதத் தலைவர்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே பல்வேறு இன, மத, மொழி மற்றும் சமூகப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் இதில் பங்கேற்றனர்.

இது இன, மத வேறுபாடுகளைக் கடந்த மக்கள் போராட்டம். நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும், சமூக அமைப்புகளும், மதத் தலைவர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து பங்கேற்றமை மிக முக்கியமான சிறப்பம்சம்மாகும்.

இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு பொதுவான நீதிக் கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் ஒன்றிணைந்தனர். இது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, மதத்திற்கோ அல்லது அரசியல் தரப்பிற்கோ உரிய போராட்டம் அல்ல. அனைத்து மக்களினதும் உரிமைகள், வாழ்வாதாரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை வலியுறுத்திய ஒரு மக்கள் போராட்டமாகும்.

இத்தகைய பரந்துபட்ட மக்கள் பங்கேற்பைச் சாத்தியமாக்கியது சிவில் சமூகத்தின் சுயாதீனமான ஒருங்கிணைப்பும், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுமேயாகும்.

அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களை ஒன்றிணைத்து, பல்வேறு சமூகங்களுக்கிடையே பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக ஒற்றுமையையும் கூட்டுச் செயற்பாட்டையும் உருவாக்குவதில் சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தை இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது.

சிவில் சமூகத்தின் பலம் என்பது ஒரு குறிப்பிட்ட அரசியல் தரப்பையோ அல்லது இனத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. மாறாக, அனைத்து மக்களையும் நீதிக்காகவும் பொதுநலனுக்காகவும் ஒன்றிணைப்பதிலேயே உள்ளது. நவம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற போராட்டம் இதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.

எனவே, இவ்வாறான ஒரு பன்மைத்துவ மக்கள் போராட்டத்தை அரசியல் கட்சிகளின் போராட்டமாகவோ அல்லது இனவாதப் போராட்டமாகவோ சித்தரிப்பது, அதில் பங்கேற்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் உண்மையான பங்களிப்பையும் ஒற்றுமையையும் மறுதலிப்பதாகும்.

போராட்டத்தின் அடிப்படை மற்றும் உண்மையான நோக்கங்கள்

  1. மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்தல்.
  2. நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோருதல்.
  3. கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாத்தல்.
  4. கால்நடைகள் மீதான தாக்குதல்களையும் பண்ணையாளர்கள் மீதான அச்சுறுத்தல்களையும் நிறுத்துதல்.
  5. கிழக்கு மாகாணத்தின் மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துதல்.

இவை எந்தவொரு இனத்திற்கோ, மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரான கோரிக்கைகள் அல்ல. இவை சட்டத்தின் ஆட்சி, நீதிக்கான உரிமை, வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளாகும்.

ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சராக, மக்கள் மத்தியில் எழுந்துள்ள பிரச்சினைகளையும் அவற்றுக்காக சிவில் சமூக அமைப்புகள் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் மதித்து அணுக வேண்டியது அவசியமாகும். மாறாக, இத்தகைய மக்கள் போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசி, அவற்றின் உண்மையான நோக்கத்தைத் திசைதிருப்புவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

குறிப்பாக, மயிலத்தமடு – மாதவனை பிரச்சினை நீண்டகாலமாக தீர்வின்றித் தொடர்கின்ற நிலையில், அதற்கான நீதியான தீர்வை வலியுறுத்தி பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து குரலெழுப்பியிருப்பதை அரசியல் நோக்கத்துடன் சித்தரிப்பது, சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.

மேலும், இந்தப் போராட்டத்தை இனவாதப் போராட்டமாகச் சித்தரிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் நாம் நிராகரிக்கின்றோம்.

மேய்ச்சல் நிலப் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பாளர்களின் உரிமைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இனவாதக் கோரிக்கைகள் அல்ல. அவை சட்டத்தையும் நீதியையும் மதிக்கும் எந்தவொரு குடிமகனும் ஆதரிக்கக்கூடிய பொதுவான உரிமைக் கோரிக்கைகளாகும்.

எனவே, அமைச்சர் சந்திரசேகரன் அவர்களே!

  • நவம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற மக்கள் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை மீளாய்வு செய்து, அவற்றை உடனடியாக மீளப்பெற வேண்டும்.
  • 14 சிவில் சமூக அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த மக்கள் போராட்டத்தின் உண்மையான ஏற்பாட்டாளர்களையும் அதன் நோக்கங்களையும் பகிரங்கமாக அங்கீகரிக்க வேண்டும்.
  • சிவில் சமூக அமைப்புகளின் சுயாதீனமான செயற்பாடுகளையும் மக்களின் ஜனநாயகப் போராட்ட உரிமையையும் மதித்து நடக்க வேண்டும்.
  • மயிலத்தமடு – மாதவனைப் பிரச்சினைக்கு அரசியல் சாயமின்றி, சட்டத்தின் அடிப்படையில் உடனடித் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நிலைப்பாடு தெளிவானது. சிவில் சமூகத்தின் குரலை அரசியல் குரலாக மாற்றிவிட முடியாது. மக்களின் நியாயமான கோரிக்கைகளை இனவாதக் கோரிக்கைகளாகச் சித்தரித்துவிட முடியாது. 14 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த மக்கள் போராட்டத்தை எந்தவொரு அரசியல் அடையாளத்திற்குள்ளும் முடக்கிவிட முடியாது.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து பங்கேற்ற இந்தப் போராட்டம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் சிவில் சமூகத்தின் சுயாதீனமான மக்கள் ஒருங்கிணைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமைச்சரின் நாடாளுமன்றக் கருத்து, சிவில் சமூகத்தின் இத்தகைய ஜனநாயகப் பங்களிப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமையால் அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மக்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும், வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காகவும் எமது சிவில் சமூகப் பணிகள் தொடரும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
மக்களின் தோற்றம் பச்சைக்குத்துதல் அல்லது உடைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களைக் குறிவைக்கச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்- நாமல் ராஜபக்ச
Gotabhaya-Rajapaksa-700x315
கோட்டாபய வெளிநாடு சென்றால் மீண்டும் நாடு திரும்புவாரா- குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சந்தேகம் -
obama11
அமெரிக்க மக்கள் ஒரு 'தெளிவான செய்தியை' தெரிவித்துள்ளனர் — பராக் ஒபாமா 
police sri
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலத்தை தற்போதைய வடிவில் முன்னெடுக்கவேண்டாம் - மாற்றங்களை செய்யுங்கள் - ஐநாவிற்கு தெளிவுபடுத்துங்கள் - ஐநாவின் மனித உரிமை நிபுணர்கள் கூட்டாக வேண்டுகோள்
mahishini
இந்தியாவும் இலங்கையும் கடல்களை மாத்திரம் பகிர்ந்துகொள்ளவில்லை பாதுகாப்பையும் பகிர்ந்துகொள்கின்றன-இலங்கை தூதுவர் 
aruna jaya
படைவிட்டோடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது
6659e687-ef4e-409e-9aff-d9364619584d
அமெரிக்க காங்கிரஸின்கட்டுப்பாட்டைக் கைப்பற்றுகிறது ஜனநாயகக் கட்சி — இதன் முக்கியத்துவம் என்ன
psta no1
புதிய பாதுகாப்பு சட்டமூலங்களை மீளப்பெறுங்கள் - நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம்
still-23115712-1307236-47-still
ஜனநாயகக் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி
aacdb9d0-d70a-11f1-81b9-c76bd127a61a
டிரம்பின் எஞ்சிய ஆட்சிக் காலத்தை தீர்மானிக்கும் அமெரிக்க இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது