புனித யாகப்பர் தேவாலயம்
1993ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.20 மணியளவில், யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள புனித யாகப்பர் (St. James) கத்தோலிக்க ஆலயத்தின் மீது விமானப்படையின் விமானமொன்றிலிருந்து இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்; ஆலயமும் அதனை அண்டிய கட்டிடங்களும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகின. அன்றைய தினம் காலை திருப்பலி அருகிலுள்ள சிறிய ஆலயமொன்றில் ஒப்புக்கொடுக்கப்பட்டது; புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தால், உயிரிழந்தவர்களினதும் காயமடைந்தவர்களினதும் எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாக இருந்திருக்கும்.
அன்றைய தினம் காலை யாழ்ப்பாண வான்பரப்பில் இலங்கை விமானப்படை விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்ததால், குண்டுவீச்சுக்கு அஞ்சிய சிலர் ஆலயம் தமக்குப் பாதுகாப்பான இடமாக அமையும் எனக் கருதி அங்கு தஞ்சமடைந்திருந்தனர்; ஏனையோர் பிரார்த்தனைக்காக வந்திருந்தனர். ஆனால், அவர்களது நம்பிக்கை பொய்யானது.
இச்சம்பவம் நிகழ்ந்தபோது பங்குத்தந்தையின் இல்லத்திலிருந்த, குருவாகத் திருநிலைப்படுத்தப்படவிருந்த ஒரு திருத்தொண்டர் (Deacon) நேரில் கண்ட சாட்சியமாகத் தனது அனுபவத்தை நினைவுகூர்ந்தார். விமானம் மேலே சில தடவைகள் பறப்பதைக் கேட்டும் பார்த்தும் அவர் இல்லத்தை விட்டு வெளியேறி நீர்த்தாங்கிக்கு அருகில் தஞ்சமடைந்தபோது, அவரது காலிலும் காயம் ஏற்பட்டது.

திருத்தொண்டருடன் இருந்த ஆலயத்தின் சமையல்காரர், குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க ஆலயத்திற்குள் ஓடிச் சென்றபோது கொல்லப்பட்டவர்களில் ஒருவரானார். ஆலயத்தின் தலைமை மறைக்கல்வி ஆசிரியரும் (ஞாயிறு பாடசாலை ஆசிரியர்) இத்தாக்குதலில் உயிரிழந்தார். ஒரு பெண்ணின் உடல் சிதறிப்போனதால், சதைத் துண்டுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுச் சேகரிக்கப்பட்டன. உயிரிழந்தவர்களில் குறைந்தது ஒரு குழந்தையும் அடங்கும். இருவர் “உயிருடன் கருகியதாகவும்”, ஏனையோர் “கட்டிட இடிபாடுகளுக்குள் நசுங்கி உயிரிழந்ததாகவும்” பங்குத்தந்தை மற்றும் பங்குப் பேரவையின் செயலாளர் ஆகியோர் கையொப்பமிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உயிரிழந்த ஒரு பெண், அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன் அவரது கணவர் கொடுத்த 35 ரூபா பணம் வைக்கப்பட்டிருந்த கைக்குட்டையின் மூலமே அடையாளம் காணப்பட்டார். கொல்லப்பட்டவர்களின் உடல் உறுப்புகளும் சதைத் துண்டுகளும் ஆலயம் எங்கும் சிதறிக் கிடந்தன; இந்த எச்சங்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களும் ஒரே பிரேதப்பெட்டியில்வைத்து அடக்கம் செய்யப்பட்டனர்.
உயிர் தப்பிய ஒருவர் தனது உளவியல் பாதிப்பைப் பற்றிக் கூறுகையில், பல நாட்களாகக் குண்டுவீச்சு குறித்த கனவுகள் வந்ததால் உளவளத் துணையை நாட வேண்டியிருந்ததாகத் தெரிவித்தார். ஆலயத்தின் உலோகப் பேழையும் (Tabernacle) திருப்பலி அப்பங்களும் சிதறிக் கிடந்தன. ஆலயத்தின் கூரை, உத்தரங்கள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தன. பங்குத்தந்தையின் இல்லம், ஆலய மண்டபம் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன. குண்டுவெடிப்பின் வேகம் எந்தளவுக்கு இருந்ததென்றால், ஆலயத்தின் பெரிய, கனமான கதவுப் பிணைப்பொன்று (Door hinge) மரமொன்றின் உச்சியில் காணப்பட்டது.
குருநகரில் கத்தோலிக்கர்களின் வரலாறு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு 1624ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. 1861ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் புனித யாகப்பர் ஆலயம், யாழ்ப்பாணத்தின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். 1993ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்த மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றான இது, வானத்திலிருந்து பார்க்கும்போது ஒரு ஆலயம் என்பதை மிக எளிதாக அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. ஆலயத்திற்கு அருகாமையில் எங்கும் போராளிகளின் முகாம்கள் இருக்கவில்லை என பங்குத்தந்தை மற்றும் பங்குச் செயலாளரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆலயங்களிலும் கோவில்களிலும் தஞ்சமடையுமாறு மக்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்ட இலங்கை அரசாங்கம், பின்னர் தனது ஆயுதப் படைகளைக் கொண்டு அக்கட்டிடங்களுக்குள் இருக்கும் மக்கள் மீது குண்டுவீசி அவர்களைக் கொலை செய்வதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆலயக் குண்டுவீச்சுக்கு முன்னும் பின்னும்
ஆலயத்தின் மீதான தாக்குதலுக்கு முன்னும் பின்னும் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கள் பதிவாகியுள்ளன. முந்தைய நாளான 1993 நவம்பர் 12ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்ட செயலகம் (கச்சேரி) மீது குண்டுவீசப்பட்டதில் மாவட்டச் செயலாளரும் (அரசாங்க அதிபர்) காயமடைந்தார். ஆலயத்தின் மீது குண்டுவீசப்பட்ட அதே நாளின் மாலையில் கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயம் மீதும், மறுநாளான நவம்பர் 14ஆம் திகதி வரணி வைரவர் ஆலயம் மீதும் குண்டுவீசப்பட்டது. இதில் வைரவர் ஆலயம் முற்றாக அழிந்ததுடன், பலர் காயமடைந்தனர் மற்றும் அருகிலுள்ள பல வீடுகளும் சேதமடைந்தன. ஆலயத் தாக்குதலுக்கு மறுநாளான 1993 நவம்பர் 14 அன்று, அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நுழைவாயிலிலிருந்து 50 மீற்றர் தொலைவிலும் குண்டுகள் வீசப்பட்டன. நவம்பர் 15ஆம் திகதி கிளிநொச்சி மற்றும் முள்ளியவளை வைத்தியசாலைகள் மீதும் குண்டுவீசப்பட்டது.
1993 டிசம்பர் 3ஆம் திகதி, ஆலயத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க (ICRC) அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் வரை உள்ளூர் மக்களால் அமைதிப் பேரணியொன்று நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களில் சிலர் கறுப்புத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டு பதாதைகளை ஏந்திச் சென்றதாகப் பங்கேற்பாளர் ஒருவர் நினைவுகூர்ந்தார். போராட்டம் நடைபெற்ற அன்றைய தினம் மாலையில் ஆலயத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் மீண்டும் வான்வழி குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதில் குறைந்தது 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர் மற்றும் கடைகளும் சேதமடைந்தன. போராட்டத்திற்குப் பின்னர் டிசம்பர் 3 மாலையில் தனது வீட்டின் மீது எறிகணையொன்று விழுந்ததாக ஆலயத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தால் வெளியிடப்படும் சிங்கள மற்றும் ஆங்கில வார இதழ்களான ‘ஞானார்த்த பிரதீபய’ மற்றும் ‘மெசஞ்சர்’ ஆகியவை 1993 டிசம்பர் 5ஆம் திகதி இச்செய்தியை வெளியிட்டிருந்தன. இலக்கு தவறியதால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் இது எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியதாக இரு பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருந்தன; ஆனால், இக்குண்டுவீச்சுக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் அன்றைய ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை இவ்விடயத்தை அரசாங்கத்திடம் எடுத்துச் சென்றதாகவோ அல்லது இது குறித்துக் கருத்துத் தெரிவித்ததாகவோ எந்த அறிக்கைகளையும் என்னால் காண முடியவில்லை.
ஆலயத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆலயச் சமூகம் ஒன்றிணைந்து “புனித யாகப்பர் ஆலய புனரமைப்புச் சபை”யை உருவாக்கியது. இதில் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயரும் இணைந்திருந்தார். கூட்டங்களின் குறிப்புகளும் கடிதத் தொடர்புகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய போர் மற்றும் பதற்றமான சூழல், கட்டுமானப் பொருட்கள் உட்பட இலங்கை அரசாங்கம் விதித்திருந்த பொருளாதாரத் தடை ஆகியவை ஆலயத்தை மீளக் கட்டியெழுப்புவதை மிகவும் கடினமாக்கியிருந்தன.
மணல் கொண்டு வருவதற்குக் கூட அரசாங்க அதிபரின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. 1993 முதல் குறைந்தது 2002ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி, புனரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் சமூக நலன்புரி அமைச்சு, வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அதிகாரசபை (RRAN) மற்றும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் ஆகியோருக்கு ஆலயத் தலைவர்களால் பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. 2000ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதிக்குள், பங்கு மக்களினதும் நன்கொடையாளர்களினதும் 3,286,240 ரூபா பங்களிப்பின் மூலம் தூண்கள், உத்தரங்கள் அமைத்தல் மற்றும் கூரை, சுவர்களைச் சீரமைத்தல் உள்ளிட்ட ஆலயத்தின் பிரதான பகுதியின் திருத்தப் பணிகள் நிறைவடைந்தன. பங்கு மக்கள் சீமெந்து, மணல் மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்களையும் வழங்கியிருந்தனர். ஆலயத் தொடர்புகளின்படி, 1994 பெப்ரவரி 6 அன்று ஆலயத்தைத் திருத்துவதற்கு 9,078,000 ரூபா செலவாகும் என யாழ்ப்பாண பொறியியலாளர் திணைக்களம் மதிப்பிட்டிருந்தது; ஆனால் 2002 ஜனவரி 12ஆம் திகதி வரை இராணுவம் உட்பட அரச தரப்பிலிருந்து 2,350,000 ரூபா மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

நீதியும் நினைவுச் சின்னங்களும்
ஆலயத்தின் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. வயதான பங்கு மக்களின் கூற்றுப்படி, ஆலயம் முன்னைய அதே அளவையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. 1624ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் 2013 வரையான “குருநகர் பங்கின் வரலாற்று மைல்கற்கள்” பட்டியலிடப்பட்டுள்ள நினைவுப் பலகையில், 1993ஆம் ஆண்டின் “ஆலயத்தின் மீதான வான்வழித் தாக்குதல் – 9 பலிகள்” என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 1986ஆம் ஆண்டு கடலில் வைத்து 31 குருநகர் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டமை (இதற்கு கடற்படையே காரணம் என ஊடக அறிக்கைகளும் உள்ளூர் மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்) மற்றும் 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வு ஆகியவையும் அப்பலகையில் பதிவிடப்பட்டுள்ளன. ஆலயத்தில் குண்டு ஒன்று விழுந்த இடத்தில், “இறந்தவர்களுக்கு மரியாதை, வாழ்பவர்களுக்கு எச்சரிக்கை, நீதிக்கான ஆலயம்” என்ற வாசகங்களுடன் நினைவுச்சின்னம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இதன் மேலுள்ள கூரையில் “அவர்கள் பூர்வத்தில் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டுவார்கள்… கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்புகிறேன்” என்ற வேதாகம வசனமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13ஆம் திகதி இவ்விடத்தில் வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுகிறது; இத்துயரச் சம்பவம் நிகழ்ந்து 30 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வாண்டும் நினைவேந்தல் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனது அறிவுக்கு எட்டியவரையில், போர்க்காலத்தில் தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட முதலாவது பாரிய தாக்குதல் இதுவாகும். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நவாலி மற்றும் அல்லைப்பிட்டி தேவாலயங்கள், மன்னார் மாவட்டத்தில் மடு மற்றும் பேசாலை தேவாலயங்கள் எனப் பல தேவாலயங்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில் மரணத்திற்கான காரணம் “வான்வழி குண்டுவீச்சு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்த ஒரு தாயின் பிள்ளைகளுக்குத் தலா 10,000 ரூபா வழங்கப்பட்டிருந்தது; ஆனால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் குறித்து அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. ஆலயத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசிய விமானப்படை விமானத்தில் யார் இருந்தார்கள், யார் உத்தரவிட்டார்கள் என்பதைக் கண்டறிவது ஒன்றும் கடினமான காரியமல்ல. நான் ஆலயத்தில் இருந்தபோது, இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய ஏதேனும் விசாரணைகள் நடத்தப்பட்டதா எனக் கேட்டேன். நான் கேட்ட இரண்டு நபர்களும் என் முகத்தைப் பார்த்துச் சிரித்தார்கள். இப்படுகொலைக்கு விமானப்படையே காரணம் என்பதற்குப் போதிய ஆதாரங்களும் ஏற்றுக்கொள்ளலும் இருந்தபோதிலும், இதுவரை எந்த விசாரணைகளும், வழக்குத் தொடரல்களும், தண்டனைகளும் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. மிகவும் தாமதமாகிவிட்ட போதிலும், அர்த்தமுள்ள அங்கீகாரம், மன்னிப்பு, இழப்பீடு மற்றும் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை.
ஆதாரங்கள்: புனித யாகப்பர் ஆலய ஆவணக் காப்பகம், 1993ஆம் ஆண்டின் ஊடக அறிக்கைகள், உயிர் தப்பியவர்கள், நேரில் கண்ட சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், கத்தோலிக்க குருக்கள் மற்றும் ஆலயப் பணியாளர்களின் வாக்குமூலங்கள்.
ருக்கி பெர்ணாண்டோ – டெய்லி மிரர் – 2023 நவம்பர் 11