சிலர் தமது பெற்றோரின் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் இயந்திரங்களைப் போல (robots) செயற்படக்கூடும்; ஆனால், தனது தாயாரின் இதயத்தில் 95% அடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது தமது கட்சிக்காரரால் அவ்வாறு இருக்க முடியாது எனப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலை நிச்சயமாக ஒரு ‘விசேட காரணமாகவே’ (exceptional situation) அமையும் என வாதிட்ட அவர், பிணை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை எனவும் வலியுறுத்தினார்.
சர்ச்சைக்குரிய ‘கிறிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை இடைநிறுத்தும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமா என்பது குறித்த உத்தரவு நவம்பர் 18ஆம் திகதி வழங்கப்படும் எனக் கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
கடந்த நவம்பர் 3ஆம் திகதி நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனக் குறிப்பிட்டு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த திருத்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான அவ்வாணைக்குழுவின் சட்ட விவகாரங்களுக்கான உதவிப் பணிப்பாளர் தனுஜா பண்டார, கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனச் சமர்ப்பணம் செய்தார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149(1) ஆவது பிரிவின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் சந்தேகநபர், வழக்கு விசாரணை முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். விசேட சந்தர்ப்பங்களில் பிணை வழங்குவதற்குச் சட்டம் விதிவிலக்கு அளித்திருந்தாலும், இவ்விடயத்தில் அந்த விதிவிலக்கைப் பயன்படுத்தி சந்தேகநபரை விடுவித்ததன் மூலம் நீதவான் தவறிழைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னர் பயம் காரணமாக சாட்சியமளிக்கத் தயங்கிய இரண்டு சாட்சிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளித்துள்ளதாக உதவிப் பணிப்பாளர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். இவ்வழக்கின் சாட்சியான நிமல் பெரேரா என்பவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்படுவதால் சாட்சிகளுக்கு அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாதிட்ட அவர், நவம்பர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய பிணை உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார்.
எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இக்கோரிக்கைக்குக் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
தமது கட்சிக்காரர் தற்போதும் விளக்கமறியலில் இருக்கும் நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மனுவில் உள்ள அவசரம் என்னவென அவர் கேள்வி எழுப்பினார். திருத்த மனுவில் கோரப்பட்டுள்ள இறுதி நிவாரணமும், தற்போது கோரப்படும் இடைக்கால நிவாரணமும் ஒன்றாகவே உள்ளதாகவும் அவர் வாதிட்டார். உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய அவர், வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன்னர், மனுவொன்றின் மூலம் கோரப்படும் இறுதி உத்தரவை இடைக்காலத் தடையுத்தரவாக வழங்க முடியாது எனச் சமர்ப்பணம் செய்தார்.
சட்டக் கட்டமைப்பிற்கு உட்பட்டே பிரதான நீதவான் பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என வலியுறுத்திய அவர், சந்தேகநபரின் தாயாரின் தீவிர இதய நோயை நீதவான் ஒரு விசேட காரணமாக நியாயமான முறையில் கருத்தில் கொண்டுள்ளதாகவும், எனவே ஆணைக்குழுவின் மனுவிற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை எனவும் வாதிட்டார்.
நாமல் ராஜபக்சவின் தாயாரின் இதயத்தில் 95% அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இத்தகைய சூழ்நிலையை எவ்வாறு சாதாரண ஒன்றாகக் கருத முடியும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேள்வி எழுப்பினார்.
“இந்தச் சூழ்நிலையை நாம் திட்டமிடவோ அல்லது உருவாக்கவோ இல்லை. சிலர் தமது பெற்றோரைப் பற்றிச் சிந்திக்காமல் இயந்திரங்களைப் போலச் செயற்படக்கூடும்; ஆனால் எனது கட்சிக்காரரால் அவ்வாறு செய்ய முடியாது. அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இது ஒரு விசேட சூழ்நிலை அல்ல என்று எந்தவொரு மனிதனாலும் கூற முடியாது. ஒரு மனிதாபிமானமற்ற நபரால் மட்டுமே அவ்வாறு கூற முடியும். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்துள்ள மனுவிற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை” என அவர் சமர்ப்பணம் செய்தார்.
எனவே, இடைக்காலத் தடையுத்தரவு கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தைக் கோரினார்.
இரு தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, கோரப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவு நவம்பர் 18ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்தார்.