நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் குரல்களை அரசாங்கம் நாளுக்குநாள் நசுக்கிவருவதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச நாடாளுமன்றத்தில் அவர்களின் ஒலிவாங்கிகள் செயல்இழக்கச்செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க தலைவர் ஆனந்தபாலிதவினை பார்த்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது
அரசாங்கத்தின் செயற்பாடுகளும் கொள்கைகளும் அரசியல் சுதந்திரத்தையும் அடிப்படை ஜனநாயககோட்பாடுகளையும் பலவீனப்படுத்தும் விதத்தில் காணப்படுகின்றன.
எதிர்கட்சிநாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நடவடிக்கைகளை திறமையாக முன்னெடுப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
சமீபத்தில் லாப்ஸ் எரிவாயு விவகாரம் குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மாற்று அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி விளங்குவதை செயற்படுவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரும்பவில்லை.
பொதுமக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் ஜனநாயக நிறுவனங்கள் கடும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன.
அரசாங்கம் தற்போது தொழிற்சங்க தலைவர்களை இலக்குவைக்கின்றது,தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தும் கொள்கைகளை அறிமுகப்படுத்துகின்றது.என அவர் தெரிவித்துள்ளார்