முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ (PTA) ஆகியவற்றை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சட்ட வல்லுநர்களும் வலியுறுத்தியுள்ளனர். தமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் பாரிய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இச்சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான கூட்டுப் பிரகடனம் ஒன்று, வியாழக்கிழமை (19) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் (Sri Lanka Foundation Institute) கைச்சாத்திடப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த முதலிகே, ஜனநாயக சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின் ஊடாக அரச அதிகாரங்களை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
பொலிஸ் காவலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மரணங்களைச் சுட்டிக்காட்டிய அவர், சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்கள் வரை பொலிஸார் தடுத்து வைப்பதற்கு அனுமதியளிக்கும் முன்மொழிவைக் கடுமையாக விமர்சித்தார். தடுப்புக்காவல் காலத்தை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைப்பது, இச்சட்டம் தொடர்பாக எழுந்துள்ள அடிப்படைக் கவலைகளுக்குத் தீர்வாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இச்சட்டங்களைத் திரும்பப் பெறத் தவறினால், பரந்துபட்ட மக்கள் போராட்ட இயக்கத்தை ஒன்றிணைக்கச் செயற்பாட்டாளர்கள் தயாராக இருப்பதாக வசந்த முதலிகே எச்சரித்தார்.
இதேவேளை, இலங்கையில் சட்டங்களை வரைந்து அங்கீகரிக்கும் நடைமுறையை விமர்சித்த சட்டத்தரணி திஸ்ஸ வீரகொட, முன்மொழியப்படும் சட்டங்களைச் சவாலுக்கு உட்படுத்துவதற்குப் பொதுமக்களுக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.
சட்டமூலமொன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர், அதனை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்குப் பிரஜைகளுக்குப் பொதுவாக 14 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டங்கள் இறுதி அங்கீகாரக் கட்டத்தை அடைவதற்கு முன்னர், அது குறித்து அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், பாராளுமன்றத்தில் சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாகப் பரந்துபட்ட பொதுமக்கள் ஆலோசனைகளைப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் எனவும், சட்டம் இயற்றும் செயற்பாடுகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகளவில் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இந்நிகழ்வில் உரையாற்றியவர்கள் வலியுறுத்தினர்.