ஐஸ்’ (ICE) போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 36 வயது நபர் ஒருவர், இன்று (20) அதிகாலை திடீரென சுகவீனமுற்று மரணமடைந்துள்ளார்.
திடீரென சுகவீனமுற்ற சந்தேகநபர், உடனடியாக மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அதிகாலை 12.45 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கண்டி, அம்பிட்டிய, திலேனகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
3,010 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மாத்தளை ஹித்கொல்ல (Hithgolla) பகுதியில் நேற்று (19) காலை மாத்தளை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், இரவு 11.00 மணியளவில் திடீரென நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சந்தேகநபர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் என நம்பப்படுவதாகவும், கண்டி மற்றும் கிராண்ட்பாஸ் உள்ளிட்ட சுமார் 10 பொலிஸ் நிலையங்களில் போதைப்பொருள் தொடர்பான பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதாகவும் மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதுடன், இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.