ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்புடைய சர்ச்சைக்குரிய க்ரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு (CIABOC) கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம பிறப்பித்த இந்த உத்தரவில், நாமல் ராஜபக்ஷ சிறைக் காவலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தால், அடுத்த விசாரணைத் திகதியில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முந்தைய விசாரணையின் போது நாமல் ராஜபக்ஷவைப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அந்தப் பிணை உத்தரவை அமுல்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த நவம்பர் 18 ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதேவேளை, இவ்வழக்கின் மற்றொரு சந்தேகநபரும் க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருமான ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை ட்ரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் (Transworks Square) உள்ள காணியைப் பலநோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காக க்ரிஷ் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு வசதி செய்து கொடுத்தமைக்குப் பிரதியுபகாரமாக, நாமல் ராஜபக்ஷ 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுடன் இவ்வழக்கு தொடர்புபட்டுள்ளது.
இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு எதிராக CIABOC வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.