பாதுகாப்பு அச்சம் காரணமாக பாக்கிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறும் தங்கள் முடிவை இலங்கை அணி வீரர்கள் கைவிட்டுள்ளனர்.
பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் மொசின் நக்வி இதனை டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் தொடரை தொடர்வதற்கு தீர்மானித்த இலங்கை அணிக்கு நன்றி என தெரிவித்துள்ள அவர் போட்டி நேர்மை பண்பும் ஒற்றுமையும் பிரகாசிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளும் 14ம் 16ம் திகதிகளில் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 16 வீரர்கள் பாக்கிஸ்தான் தொடரை இடைநடுவில் கைவிட்டு இலங்கை திரும்ப திட்டமிட்டிருந்தனர்.
பாக்கிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இலங்கை வீரர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மாற்றுவீராகளை அனுப்ப தயார் எனவும் நாடு திரும்பும் வீரர்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்படும் எனவும் அறிவித்திருந்தது.
