மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழி தொடர்பான பயிற்சிச் செயலமர்வொன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. சபாநாயகர் ) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இச்செயலமர்வு இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் அலுவலகம் ஏற்பாடு செய்த இந்த செயலமர்வில், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் குறிப்பிடுகையில், ஒரு மொழியில் சரியான முறையில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலேயே இனவாதம், மதவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.என தெரிவித்துள்ளார்

அனைத்து இனங்களையும் மதிக்கும் ஒரு சிறந்த இலங்கையர் என்ற சமூகத்தை உருவாக்குவதற்கு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்தி சமூகங்களை வழிநடத்துவதற்கு மொழிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மொழி என்பது தொடர்பாடலை ஏற்படுத்தும் கருவி மாத்திரமன்றி அது குறித்த மொழியைப் பேசும் சமூகத்திற்குக் கொடுக்கும் கௌரவமாகும் என்றார். எந்தவொரு நபரும் அவர் பேசும் மொழியின் காரணமாக எந்த வகையிலும் வித்தியாசமாக நடத்தப்படக்கூடாது என்றும், நாட்டின் மிக உயர்ந்த நிறுவனம் இந்த வழியில் மூன்று மொழிகளில் பணியாற்றுவதனால் காண்பிக்கப்படும் முன்மாதிரி அரச கரும மொழிகளைக் கடைப்பிடிப்பதில் பொதுமக்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது என்றார்.

இதற்கமைய, சிங்கள மொழி பாடநெறியைத் தொடர்வதற்கு 21 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மொழிப் பாடநெறியைத் தொடர்வதற்கு 63 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
