இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
